தி.நகர் துள்ளுதே.. டக்னு எழுந்த "கருணாநிதி".. உடனே ஓகே சொன்ன அமைச்சர்.. சென்னையில் பத்திர பதிவு மாஸ்
சென்னை: தமிழக சட்டசபையில் நடந்த விவாதத்தில், பத்திரப்பதிவு அலுவலகம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன தெரியுமா?
தமிழகத்தில் ரூ.27.48 கோடி மதிப்பில், நவீன வடிவமைப்புடன் கூடிய 15 புதிய சார் பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள் கட்ட ஒரே நாளில் அரசாணை சமீபத்தில் வெளியாகியிருந்தது. பத்திரப் பதிவுக்கு வரும் மக்களின் நலன் கருதி, அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடங்களைக் கட்டுமாறு முதல்வர் ஸ்டாலின் முன்னமே உத்தரவிட்டிருந்தார்.

அந்தவகையில், 44 புதிய அரசுக் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கி, அரசாணைகள் வெளியிடப்பட்டன... தொடர்ந்து, ரூ.27.48 கோடி மதிப்பில் மேலும் 15 புதிய அரசுக் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கி, ஒரே நாளில் அரசாணை வெளியிடப்பட்டன. இதன்படி, 15 வாடகைக் கட்டிடங்களில் செயல்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.
பழைய கட்டிடங்கள்: அதாவது, திருப்போரூர், பென்னாகரம், உப்பிலியாபுரம், நெல்லிக்குப்பம், விராலிமலை, கயத்தாறு உள்ளிட்ட சார் பதிவாளர் அலுவலகங்களின் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு, அதே இடத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன், நவீன முறையில் புதிய வடிவமைப்புடன் கூடிய சொந்தக் கட்டிடங்களும் கட்டப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், சார் பதிவாளர் அலுவலகத்தை தி.நகர் பகுதியில் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.. தமிழக சட்டசபை தற்போது நடந்து வருகிறது. சட்டசபையில் இன்று தியாகராயநகர் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதி பேசும்போது, சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.
பத்திரப்பதிவு: வடபழனி அழகிரிநகர் 5-வது தெருவில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு கட்டிடம் கட்டப்படுமா? என்று கருணாநிதி கேட்டார்..
இதற்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பதிலளித்து பேசும்போது, "இந்த சார் பதிவாளர் அலுவலகம் 100 அடி சாலை தனியார் கட்டிடத்தில் தரை தளத்தில் இயங்கி வருகிறது. கோடம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட உரியநிலத்தை தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது. நிலம் தேர்வு செய்யப்பட்டதும் சொந்த கட்டிடம் கட்ட பரிசீலிக்கப்படும்" என்றார்.
உடனே ஜெ.கருணாநிதி, சார் பதிவாளர் அலுவலகம் இப்போது இடம் மாற்றப்பட்டுள்ளது. மறுபடியும் அதே இடத்தில் கட்டிடம் கட்ட அரசு அனுமதிக்குமா? என்று அடுத்த கேள்வியை எழுப்பினார்.
மூர்த்தி பதில்: இதற்கு அமைச்சர் மூர்த்தி, "கோடம்பாக்கத்தில் 8440 சதுர அடி இடம் தேர்வு செய்து கொடுத்தால் உடனே புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உடனே கருணாநிதி, தியாகராயநகர் தொகுதிக்கு உட்பட்ட வடபழனி, மேற்கு மாம்பலம், அசோக்நகர் உள்ளடக்கிய சார் பதிவாளர் அலுவலகம் கே.கே.நகர் பகுதியில் இருந்து இப்போது அந்த பத்திரப்பதிவு அலுவலகம் முகப்பேருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதனால், தி.நகர் தொகுதிக்குள்ளேயே சார் பதிவாளர் அலுவலகம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
நம்பிக்கை: இந்த கோரிக்கை பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, இடம் இல்லாத பட்சத்தில் அங்கு இருக்கும் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.. இங்கே இடம் இருக்கும் பட்சத்தில் அதுபற்றி ஆய்வு செய்யப்படும் என்றார்.. அந்தவகையில், தி.நகரில் பத்திரப்பதிவு அலுவலகம் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்றே நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications