தாம்பரத்தில் ரூ.50 கோடி நிலம்.. வில்லங்கம் செய்த பத்திரப்பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத்! சென்னை பரபர
சென்னை: 50 கோடி ரூபாய் நில அபகரிப்பு கும்பலுக்கு உடந்தையாக இருந்த பத்திரப்பதிவு டிஐஜி ரவீந்திரநாத்தை, ஒரு நாள் காவலில் எடுத்துள்ள சிபிசிஐடி போலீசார், அவரது அலுவலக உதவியாளர்களிடமும் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.
சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் நில மோசடி நடப்பதாக சமீபகாலமாகவே புகார்கள் கிளம்பியிருந்தன.. அந்தவகையில், சில அதிகாரிகளின் துணையுடன் பத்திரப்பதிவில் மோசடி நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பான விசாரணையை போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு முதலே முன்னெடுத்தனர்.

அந்த சமயத்தில், பத்திரப்பதிவுத்துறை டிஐஜியாக பணியாற்றி வந்த 57 வயது ரவீந்திரநாத், தென்சென்னை பத்திரப்பதிவு துறை பதிவாளராக பணியாற்றி வந்தார்.. அப்போது சென்னை பெருங்களத்தூரில் கலைவாணி என்பருக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 1.5 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பதிவு செய்வதற்கு உடந்தையாக இருந்ததாகவும் புகார்கள் வெடித்தன.
கலைவாணி: இதுதொடர்பாக ஹைகோர்ட்டை நாடினார் பெருங்களத்தூர் கலைவாணி.. இதையடுத்து சிபிசிஐடி விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தாம்பரம் சார்-பதிவாளரிடம் உதவியாளராக பணியாற்றிய லதா உள்பட 5 பேரை கைது செய்தனர்.. இதில் லதா என்பவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.
அதேபோல, சேலம்-மதுரை (பொறுப்பு) சரக பத்திரப்பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத்தையும், கடந்த செப்டம்பர் 25-ந்தேதி சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.. பெருங்களத்துாரில், கலைவாணி என்பவருக்கு சொந்தமான, 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க உடந்தையாக இருந்துள்ளார்.
போலி ஆவணம்: அதேபோல, சென்னை தாம்பரம் அருகே, வரதராஜபுரத்தில் சையது அமீன் என்பவருக்கு சொந்தமான, 5 ஏக்கர் நிலத்தை, போலி ஆவணம் வாயிலாக அபகரித்த கும்பலுக்கும் உடந்தையாக இருந்துள்ளார்.
அதாவது, ரவீந்திரநாத்தே, சொத்து பத்திரத்தில், விரல் ரேகை பதிந்து லாகின் செய்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.. அதுமட்டுமல்ல, 8 முறை முறை வில்லங்க சான்றிதழ் முறைகேடாக மாற்றி வைத்திருக்கிறார் ரவீந்திரநாத்... வில்லங்க சான்றிதழில் 8 முறை திருத்தங்கள் செய்ய, தென்சென்னை மாவட்ட பதிவாளராக இருந்த ரவீந்திரநாத் உடந்தையாக இருந்ததாக மணிமொழியான் என்பவரும் வாக்குமூலமும் கொடுத்துள்ளார்..
நிலப்பத்திரம்: "தினமும் நூற்றுக்கணக்கான கோப்புகளை பார்க்கிறேன். அவசரத்தில் குறிப்பிட்ட நிலப்பத்திரம் தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டேன். இதற்காக ஆதாயம் எதுவும் பெறவில்லை" என்று போலீசார் விசாரணையில் ரவீந்திரநாத் கூறியிருந்தாராம்.
இந்நிலையில், பெருங்களத்தூர் நில அபகரிப்பு தொடர்பான வழக்கில், ரவீந்திரநாத்தை காவல் எடுக்க அனுமதி கோரி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள்.. அதன்படி, ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து, நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, ரவீந்திரநாத்திடம், நில அபகரிப்பு தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
ஒருநாள் விசாரணை: ரவீந்திரநாத் தென் சென்னையில் பணியாற்றியபோது, அலுவலக உதவியாளர்களாக இருந்த நித்யானந்தம், ஆனந்தன் ஆகியோரிடமும், நேற்று விசாரணை நடத்தினார்கள்.. ரவீந்திரநாத் மற்றும் அவரது அலுவலக உதவியாளர்களிடமும் விசாரணை நடத்திய நிலையில், பல்வேறு விவரங்களை அவர்களிடமிருந்து சிபிசிஐடி போலீசார் பெற்றிருப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications