சென்னை அம்பத்தூர் டாஸ்மாக் குடோனில்.. சாதுர்யமாக செயல்பட்ட லாரி டிரைவர்... ஆனாலும் ட்விஸ்ட்
சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தமிழக அரசின் டாஸ்மாக் குடோன் அமைந்துள்ளது. பல்வேறு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் மது பாட்டில்கள் மொத்தமாக இங்கு வைக்கப்பட்டு, பின்னர் அவை டாஸ்மாக் கடைகளுக்கு லாரிகளில் அனுப்பி வைப்பது வழக்கம் ஆகும்.இங்கு ஏராளமான லாரிகளில் மதுபான பாட்டில்கள் வந்திருந்தன. ஒரு லாரியில் மின்கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட தீப்பொறி விழுந்தது. அப்போது டிரைவர் செய்த சமார்த்தியமான வேலையால் ஒரு லாரியுடன் சிக்கல் முடிந்தது.
தமிழக அரசின் டாஸ்மாக் குடோன் ஒன்று மிகப்பெரிய அளவில் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைந்திருக்கிறது சென்னையை சுற்றியுள்ள பல்வேறு மதுபான தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் மது பாட்டில்கள் மொத்தமாக இங்கு வைக்கப்படுவது வழக்கம். அம்பத்தூர் டாஸ்மாக் குடோனில் இருந்து தான், அவை டாஸ்மாக் கடைகளுக்கு லாரிகளில் அனுப்பி வைப்பது வழக்கம் ஆகும்.

நேற்று அதிகாலை வழக்கம்போல் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு வரிசையாக லாரிகள் வந்தன. குடோன் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது மேலே சென்ற மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியது.இதனால் ஏற்பட்ட தீப்பொறி, அங்கு நிறுத்தி இருந்த ஒரு லாரியில் மதுபாட்டில்கள் இருந்த அட்டைப்பெட்டியில் விழுந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதனால் அட்டைப்பெட்டிகள் மற்றும் மதுபானம் இருந்ததால், கண் இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென லாரி முழுவதும் பரவியது. உடனடியாக லாரி டிரைவர், சாதுர்யமாக செயல்பட்டு தீப்பிடித்து எரிந்த லாரியை, கொஞ்சமும் தாமதிக்காமல் அங்கிருந்து சிறிது தூரம் தள்ளி ஓட்டிச்சென்று நிறுத்தினார். அங்கிருந்தவர்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் லாரியும், அதில் 500 அட்டைப்பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 24 ஆயிரம் மது பாட்டில்களும் எரிந்து நாசமாயின. சேதமடைந்த மதுபாட்டில்களின் மதிப்பு சுமார் ரூ.35 லட்சம் இருக்கும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீப்பிடித்து எரிந்த லாரியை டிரைவர் துரிதமாக செயல்பட்டு அப்புறப்படுத்தியதால் மற்ற லாரிகளும், அதில் இருந்த மதுபாட்டில்களும் தீயில் இருந்து தப்பியது. இது குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications