சென்னை குரோம்பேட்டை ஐடி ஊழியர் 39 வயதில் இப்படியொரு முடிவு ஏன்.. மீனம்பாக்கத்தில் நடந்தது என்ன?
சென்னை: சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஐடி ஊழியர் பாலாஜிக்கு 39 வயது ஆகிறது. இவர் ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஜூன் மாதம் தான் அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. வேலைக்கு சேர்ந்ததில் இருந்தே அவருக்கு வேலை பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் சென்ற ஐடி என்ஜினியர்.. அப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கிறார்.
சென்னையில் 25 வயதில் ஐடி ஊழியராக வேலைக்கு சேருவோருக்கு நல்ல சம்பளத்தில் ஆரம்பத்தில் வேலை கிடைக்கிறது. 40000 முதல் லட்சம் வரை சம்பளத்தை வாங்குகிறார்கள். நல்ல சம்பளத்தில் வேலை செய்யும் அவர்கள் 35 வயதை கடந்த பின்னர் மெல்ல மெல்ல அதிக சம்பளம் காரணமாக வேலையில் இருந்து மாற வேண்டிய அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அல்லது வேலையை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். மிகத்திறமையனவர்களே விரும்பும் ஐடி நிறுவனங்கள், இளைஞர்களையும், கல்லூரிகளில் படித்து முடித்த பிரஸ்ஷர்களையும் வேலைக்கு எடுக்க ஆர்வம் காட்டுகின்றன.

நடுத்தர வயதில் வேலை பறிபோகிறது
இதனால் அதிக சம்பளத்தில் வேலை செய்யும் 40 வயதை நெருங்கும் அல்லது அதை கடந்தவர்கள் ஒரு கட்டத்தில் வேலையை விட்டு விலக வேண்டியநிலைக்கு ஆளாகிறார்கள்.சிலர் அதைவிட குறைவான சம்பளத்தில் வேலைக்கு சேர வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் வாங்கிய சம்பளம் புதிதாக வேலைக்கு சேரும் நிறுவனங்களில் கிடைப்பது இல்லை.. இது ஒருபுறம் எனில், வேலையில் திருப்தியின்மையிலும் அவதிப்படுகிறார்கள். சென்னையில் ஐடி ஊழியர் ஒருவர் புதிதாக வேலைக்கு சேர்ந்த இடத்தில் வேலையை பிடிக்காமலேயே வேலை செய்து வந்தாராம். அவர் திடீரென எடுத்த முடிவு ஆடிப்போக வைத்துள்ளார்.
குரோம்பேட்டை பாலாஜி
சென்னை அடுத்த குரோம்பேட்டை சாந்தி நகரை சேர்ந்த 39 வயதாகும் பாலாஜி என்பவர் ஐடி என்ஜினியர் ஆவார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று காலை வேலைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் பாலாஜி புறப்பட்டுள்ளார்.
மீனம்பாக்கம் மேம்பாலம்
அவர் பல்லாவரத்தை கடந்து, மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் வந்த போது, திடீரென வாகனத்தை நிறுத்தியுள்ளார். மீனம்பாக்கம் - திரிசூலம் மேம்பாலத்தில் வாகனத்தை ஓரமாக நிறுத்தியவர், கண் இமைக்கும் நேரத்தில் 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்து பாலாஜி உயிருக்கு போராடினார். இதை கண்டு ஷாக்கான வாகன ஓட்டிகள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
என்ன காரணம்
முதற்கட்ட விசாரணையில், பாலாஜி தனியார் ஐடி நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி தான் பணியில் சேர்ந்துள்ளார். பணிச்சுமை காரணமாக, கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்தாராம். இது குறித்து வீட்டில் மற்றும் அவரது நண்பர்களிடம் புலம்பி வந்தாராம்.இந்நிலையில் தான் பாலாஜி இப்படி முடிவெடுத்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. எனினும் பாலாஜியின் முடிவுக்கு காரணம் பணிச்சுமையா? அல்லது குடும்பப் பிரச்சினையா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications