தூங்குனது ஒரு குத்தமா.. பல்லவன் ரயிலில் டிடிஆர் vs பயணி .. இருவரும் மாறி மாறி தாக்குதல்
சென்னை: சென்னையில் இருந்து காரைக்குடி சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி ஒருவருக்கும், டிக்கெட் பரிசோதகர் ஒருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி தாக்கி கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. தூங்கிய போது எழுப்பியதால் டிக்கெட் பரிசோதகரை தகாத வார்த்தையில் பேசி, பயணி தாக்கியதால், பதிலுக்கு டிக்கெட் பரிசோதகரும் தாக்கியதாக கூறப்படுகிறது.
காரைக்குடியில் இருந்து தினமும் அதிகாலை புறப்பட்டு பிற்பகலில் சென்னைக்கு வருகிறது பல்லவன் எக்ஸ்பிரஸ். இது மீண்டும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலாக திருச்சி, திண்டுக்கல் வழியாக, மதுரைக்கு புறப்பட்டு செல்லும். அதேபோல் வைகை எக்ஸ்பிரஸ் தினமும் காலையில் மதுரையில் இருந்து புறப்பட்டு, திண்டுக்கல், திருச்சி வழியாக சென்னைக்கு பிற்பகலில் வருகிறது. திரும்பவும் பிற்பகலிலேயே பல்லவனாக மாறி, திருச்சி வழியாக கரைக்குடி வரை செல்கிறது. முன்பு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி வரை தான் சென்று வந்தது. ஆனால் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட மக்களின் கோரிக்கை ஏற்று பல்லவன் காரைக்குடி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படியே கடந்த சில ஆண்டுகளாக சென்று வருகிறது.

தென் மாவட்ட மக்கள் பகலில் சொந்த ஊரான திருச்சி, திண்டுக்கல், மதுரை செல்ல வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதேபோல் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட மக்கள் பகலில் சென்னையில் இருந்து செல்ல பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை பயன்படுத்தி வருகிறார்கள். வந்தே பாரத், தேஜஸ் ரயிலுக்கு அடுத்தபடியாக அதிவேகமாக செல்லும் ரயில்களாக பல்லவனும், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்களும் திகழ்கின்றன. பிற்பகலில் கிளம்பி, இரவே ஊருக்கு போய்விட முடியும் என்பதால் இந்த இரண்ட ரயில்களுக்குமே வரவேற்பு அதிகம். அதுமட்டுமின்றி மிக குறைந்த கட்டணம் என்பதால், தென் மாவட்ட மக்களுக்கு பல்லவனும், வைகையும் தான் மிகவும் விருப்பான ரயில் ஆகும்.
இந்நிலையில் நேற்று வைகை எக்ஸ்பிரஸ் வழக்கம் போல் சென்னை வந்து சேர்ந்த பின்னர், மீண்டும் பல்லவனாக மாறி காரைக்குடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. பொதுவாக பல்லவன் வைகை என இரண்டு ரயில்களிலும் டிக்கெட் எடுக்காமல் அல்லது சாதாரண டிக்கெட் எடுத்து முன்பதிவு பெட்டியிலோ பயணிப்பது சாத்தியமே இல்லை.. ஏனெனில் ஒவ்வொரு ஸ்டேசன் வந்த உடன் டிடிஆர்கள் செக்கிங் செய்வார்கள். அந்த வகையில் டிக்கெட் பரிசோதர் பல்லவன் ரயிலில் கேட்டபடி வந்தார்.
அதில் ஒரு பயணி ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தபடி தூங்கியபடி வந்துள்ளார். டிடிஆர் அவரை தட்டி எழுப்பி உள்ளார். அப்போது கோபமடைந்த பயணி, தூங்கும் போது எழுப்புவியா என்ன..? என்று ஆவேசமாக டிக்கெட் பரிசோதகரை பார்த்து ஒருமையில் தகாத வார்த்தைகளால் பேசி திட்டினாராம். இதனால் கோபம் அடைந்த டிக்கெட் பரிசோதகர் அவரை தாக்கி உள்ளார். பதிலுக்கு பயணியும் தாக்கி உள்ளார். இருவரும் மாறி மாறி திட்டி, தாக்கி கொள்ளும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இது பற்றி விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications