வேலைவாய்ப்பு + பாதுகாப்பு.. சென்னை தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்! டாப் லிஸ்ட்டை பாருங்க!
சென்னை: பெண்களுக்கான அதிக வேலை வாய்ப்பு மற்றும் அவர்களுக்கு எதிராக குறைவான குற்றங்கள் பதிவாகும் நகரங்களின் பட்டியலில் சென்னை முதல் இடத்தில் இருப்பதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
பன்முகத்தன்மை ஆலோசனை நிறுவனமான அவதார் குழுமம் இது தொடர்பான ஆய்வை நடத்தி இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் (TCWI) பட்டியலை வெளியிட்டிருக்கிறது. மொத்தமாக 113 நகரங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ஒரு பிரிவாகவும், 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களை இரண்டாவது பிரிவாகவும் பிரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

முதல் பட்டியலில், பெண்களின் வேலைவாய்ப்பிற்கு மிகவும் உகந்த சூழலையும், பாதுகாப்பையும் உருவாக்கும் நகரங்களின் பட்டியலில் சென்னை முதல் இடத்தில் இருக்கிறது. சென்னையை தொடர்ந்து பெங்களூர், புனே, மும்பை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்கள் இருக்கின்றன. இந்த ஆய்வில் மூன்று முக்கிய விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன. முதலில் சமூக அமைப்பு, இரண்டாவது தொழில்துறை, மூன்றாவது மக்களின் அனுபவங்கள். இவை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு பெறப்பட்ட பதில்களின் அடிப்படையில்தான் இந்த பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.
113 நகரங்களில் 10 லட்சத்திற்கும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் 49 இருக்கின்றன. அதேபோல 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் 64 இருக்கின்றன. இந்த இரண்டாவது பட்டியலில் திருச்சிராப்பள்ளி முதலிடத்தையும், வேலூர், கொச்சி, திருவனந்தபுரம், சிம்லா ஆகியவை அடுத்த மூன்று இடங்களையும் பிடித்திருக்கின்றன. முதல் 10 நகரங்களின் பட்டியலில் தென் மாநிலங்கள் 8 இடங்களை பிடித்திருக்கிறது. வட மாநிலங்களிலிருந்து சிம்லா மற்றும் குருகிராம் ஆகியவை 2 இடங்களை பிடித்திருக்கின்றன.
இந்த ஆய்வு முடிவுகள் மூலம், பெண்களுக்கான பாதுகாப்பு விகிதத்தில் தேசிய சராசரியை விட தென் மாநிலங்கள் முன்னணியில் இருப்பதை தெரிந்துகொள்ள முடியவதாக செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளனர். சட்டம் ஒழுங்கு, அரசு மீது மக்களின் நம்பிக்கை, முற்போக்கு கலாச்சாரம் போன்றவைதான் இந்த முன்னேற்றத்திற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இது தவிர சமூக பாகுபாடுகளை களைய அரசு அவ்வப்போது எடுத்து வரும் நடவடிக்கைகளும் இதற்கு காரணமாக குறிப்பிடப்படுகிறது.












Click it and Unblock the Notifications