25 அல்ல.. 5 விதிமீறலுக்கே அபராதம்... சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் முக்கிய உத்தரவு
சென்னை: போக்குவரத்துப் போலீசார் கும்பலாக நின்று கொண்டு வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி காட்டி அபராதம் வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில், போக்குவரத்து போலீசாருக்கு சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரி அறிவுறுத்தலின் படி, இனி ஐந்து வகையான விதிமீறலுக்குத்தான் அபராதம் விதிக்கப்பட உள்ளது. தலைகவசம் இல்லாமல் செல்வது, 3 பேர் ஒரே பைக்கில் செல்வது உள்பட ஐந்து விதிமீறல்களை பற்றி பார்ப்போம்.
சென்னை மாநகரத்தில் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் போக்குவரத்து போலீசார் இரு சக்கர வாகனங்களையும், கார்களையும் மடக்கி அபராதம் வசூலித்து வருகிறார்கள். ஹெல்மெட் அணியாதது, 3 பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் செல்வது உள்ளிட்ட 25 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் மது அருந்துவிட்டு வாகனத்தில் செல்வோரை மறைந்து இருந்து பிடிப்பதும் ஆங்காங்கே நடக்கிறது.

ஆனால் தலைகவசம் அணியாமல் அந்த நேரத்தில் வெளியில் செல்லும் இளைஞர்கள், போக்குவரத்து போலீசாரை கண்டதும், இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்வது, அல்லது வந்த வழியாக ஒரு வழிப்பாதையில் தப்பி செல்ல முயற்சிப்பது நடக்கிறது. இப்படி போலீசுக்கு பயந்து செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதும் அடிக்கடி நடக்கிறது. அதேபோல் கும்பலாக நின்று வாகன ஓட்டிகளை போலீசார் விரட்டி பிடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.
காலையில் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும். மாலையில் 5 மணி முதல் 7 மணி வரையிலும் எல்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலும் சோதனை சாவடி அமைத்து விதிமீறலில் ஈடுபடுவோரை போலீசார் பிடிக்கிறார்கள். அதேபோல் மது அருந்துவிட்டு வருவோரை பிடிக்கவும், பழைய திருடர்களை பிடிக்கவும் இரவு 11 மணிக்கு மேல், சென்னையின் எல்லா காவல் நிலைய எல்லைக்குட்ட பகுதியிலும் போலீசார் சோதனை நடத்துவது வழக்கம். குறிப்பாக மது அருந்திவிட்டு விபத்தில் சிக்குவதை தடுக்கும் விதமாக வார இறுதியில் சோதனையை போலீசார் தீவிரப்படுத்துவார்கள்.
இந்நிலையில் போக்குவரத்துப் போலீசார் கும்பலாக நின்று கொண்டு வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி காட்டி அபராதம் வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில், போக்குவரத்து போலீசாருக்கு சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.. அதன்படி 25 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு இதுவரை அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இனி 5 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட உள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி அருண் வெளியிட்ட அறிவிப்பின் படி, வாகனத்தை அதிவேகமாக ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், நோ என்ட்ரியில் வாகனத்தை ஓட்டிச் செல்லுதல், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுதல், இரு சக்கர வாகனத்தில் இருவருக்கும் மேல் செல்லுதல் ஆகிய 5 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications