சென்னை டூ உடன்குடி ஆம்னி பஸ்.. பார்சலில் போன 43 பவுன் தங்க நகை.. டீ குடிக்க இறங்கியபோது கிளீனர் செய்த சம்பவம்
தூத்துக்குடி: சென்னையில் (Chennai Omni Bus) இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் பார்சல்களும் அனுப்பப்பட்டு வருகின்றன. அப்படித்தான் சென்னையில் வசித்து வரும் நகை வியாபாரி ஒருவர் ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி செல்லும் ஆம்னி பஸ்சில் அனுப்பியிருக்கிறார். ஆனால் அந்த பஸ்சில் இருந்த கிளீனர் ஒருவரே நகைப்பையுடன் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. நெல்லை, நாகர்கோவில், உடன்குடி, தென்காசி, தூத்துக்குடி என பல்வேறு மாவட்டங்களுக்கு தினந்தோறும் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வரும் செல்கின்றனர்.

ரூ.35 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள்
சென்னையில் தங்கி பணிபுரியும் பலரும், சொந்த ஊர் செல்வதற்கு ஆம்னி பஸ்களையே பயன்படுத்துகின்றனர். இதற்குப் பிறகு, சில ஆம்னி பஸ்களில் பார்சல்களும் அனுப்பப்படுகின்றன. அப்படித்தான் சென்னையிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடிக்கு சென்ற ஆம்னி பஸ்சில், சென்னையை சேர்ந்த ஒருவர் ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் அடங்கிய பார்சலை அனுப்பியுள்ளார். உரியவரிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டிய பஸ் கிளீனரே அந்த நகைப்பையுடன் தப்பி சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் ஆரிப். தங்க நகைகளை தயாரித்து விற்று வருகிறார். இவரது சகோதரர் செய்யது முகைதீன், நெல்லை டவுனில் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார்.
நகை வியாபாரம் செய்து வந்தார்
சென்னையில் தங்க நகைகளை செய்து வியாபாரம் செய்து வரும் ஆரிப், இந்த தங்க நகைகளை தனது சகோதரர் முகைதீனுக்கு ஆம்னி பஸ் மூலமாக அனுப்பி வந்தார். பஸ்சில் கொண்டு செல்லப்பட்டு, காயல்பட்டினத்தில் பஸ் நின்றபோது அபுதாஹீர் என்பவர் அந்த நகைகளை பெற்றுக் கொண்டு முகைதீனிடம் ஒப்படைப்பார்.
முன்பு அனுப்பியபோதெல்லாம் இப்படித்தான் நகை முகைதீனிடம் வந்து சேரும். இந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதி வழக்கம்போல 43 பவுன் நகைகளை சகோதரரிடம் கொடுப்பதற்காக அதே ஆம்னி பஸ்சில் அனுப்பியுள்ளார். அதன்படி பஸ் கிளம்பி நெல்லை நோக்கிச் சென்றது. அந்த பஸ்சில் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் பகுதியை சேர்ந்த சிவபாலன், சுப்பையா ஆகியோர் டிரைவர்களாகவும், வீரபாண்டியன்பட்டினம் சண்முகபுரத்தைச் சேர்ந்த கிளீனர் ஒருவரும் இருந்தனர்.
டீ குடிக்கச் சென்ற கிளீனர்
பஸ் வழக்கமாக காயல்பட்டினத்தில் நின்று செல்லும். ஆனால் அன்று பயணிகள் யாரும் டிக்கெட் எடுக்காததால் பஸ் அங்கு நிற்காமல் காலை 8 மணியளவில் ஆறுமுகநேரி பஸ் நிலையத்தில் நின்றது. இதையடுத்து டிரைவர் சிவபாலன், நகையை அங்கு வந்து வாங்கிக் கொள்ளுமாறு போன் செய்து கூறினார். அதன்பேரில் அங்கு வந்து நகையை கேட்டபோது, நகைப்பை காணாமல் போயிருப்பது டிரைவருக்கு தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிவபாலன் என்ன செய்வதென்று திகைத்தார். அப்போது தான் கிளீனரும் மாயமானதை உணர்ந்தார். தொடர்ந்து கிளீனருக்கு செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவரது எண் சுவிட்ச் ஆஃப் என வந்தது. இதையடுத்து அபுதாஹீர், ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
தனிப்படை அமைத்து தேடும் போலீசார்
முதற்கட்ட விசாரணையில், ஆம்னி பஸ் தூத்துக்குடி சாகுபுரத்தில் உள்ள டீக்கடையில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த நேரத்தில் கிளீனர் உள்பட பயணிகள் பலரும் இறங்கி டீ குடித்துள்ளனர். பயணிகள் அனைவரும் பஸ்சில் ஏறிய நிலையில், கிளீனர் மட்டும் ஏறாமல் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இதனால் அவர் தான் நகையை திருடி சென்றிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகித்தனர்.
கிளீனர் திருடி சென்றதாக கூறப்படும் நகைப்பையில் 43 பவுன் நகை, அதாவது ரூ.35 லட்சம் மதிப்பு உள்ளதாகவும், 15 வகையான தங்க நகைகள் இருந்ததாகவும் ஆரிப் தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 2 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆம்னி பஸ்சில் கிளீனர் ஒருவரே நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications