காய்கறிகளின் விலையை தாறுமாறாக உயர்த்திய 'மாண்டஸ்'.. கோயம்பேடு சந்தையிலேயே இவ்வளவா? நிலவரம் என்ன?
சென்னை: 'மாண்டஸ்' புயலின் தாக்கத்தால் காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையிலேயே விலை கணிசமாக அதிகரித்திருப்பதால், வெளிச்சந்தைகளில் பக்கத்திலேயே நெருங்க முடியாத அளவுக்குதான் காய்கறிகளின் விலை இருக்கிறது.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல், மாமல்லபுரத்தில் கடந்த 10-ம் தேதி கரையை கடந்தது. வட தமிழக மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மாண்டஸ் புயலின் கோரத்தாண்டவத்தை பார்த்தன.
புயலின் தாக்கத்தில் இருந்து இந்த மாவட்டங்கள் விடுபட, குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது ஆகும் என்றே தெரிகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியதோடு மட்டுமல்லாமல், காய்கறிகளின் விலையையும் தாறுமாறாக ஏற்றிச் சென்றுள்ளது மாண்டஸ் புயல்.

காய்கறி வரத்து குறைவு
மாண்டஸ் புயலால் 4 நாட்களுக்கு பெய்த அதீத மழை காரணமாக பல மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் காய்கறிகளின் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், காய்கறிகளின் விலை ஜெட் வேகத்தில் எகிறி வருகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, ஒவ்வொரு காய்கறிகளிலும் தலா ஒரு கிலோ வாங்கிச் செல்பவர்கள், தற்போது கால் கிலோவுக்கும் குறைவாகவே வாங்குவதாக கூறப்படுகிறது.

அலற வைக்கும் காய்கறி விலைகள்
குறிப்பாக, பீன்ஸ், அவரை, முருங்கைக்காய் என அன்றாட சமையலுக்கு பயன்படும் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, ரூ.20 வரை விற்பனையான ஒரு கிலோ பீன்ஸ், அவரை உள்ளிட்ட காய்கறிகள் தற்போது ரூ.30 முதல் ரூ.35 வரை விற்கப்படுகின்றன. பாகற்காய், கத்தரி, பீர்க்கங்காய் உள்ளிட்டவற்றின் விலை ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரித்துள்ளன.

தக்காளி விலையும் உயர்வு
சமையலில் முக்கிய இடம் வகிக்கும் தக்காளி விலையும் எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதாவது, சில தினங்களுக்கு முன்பு ரூ.12-க்கு விற்பனையான தக்காளி விலை தற்போது ரூ.30-ஐயும் தாண்டி விற்பனை ஆகிறது. முருங்கைக்காய் விலையும் எட்டி நின்று பார்த்துவிட்டு செல்லும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும் இப்போது மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் வட தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்த மழை முடிந்தால் மட்டுமே காய்கறிகளின் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

காய்கறி விலை நிலவரம்
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை நிலவரம் வருமாறு: (விலை/கிலோவில்) தக்காளி -ரூ.30, உருளைக்கிழங்கு - ரூ.50 முதல் ரூ.100, ஊட்டி கேரட் - ரூ.25 முதல் ரூ.40, பீன்ஸ் - ரூ.25, பீட்ரூட் (ஊட்டி) - ரூ.35, வெண்டைக்காய் - ரூ.40 முதல் ரூ.50, சுரக்காய் - ரூ.20, பாகற்காய் - ரூ.30 முதல் ரூ.35, முருங்கைக்காய் - ரூ.100 முதல் ரூ.150, பச்சை மிளகாய் - ரூ.30 முதல் ரூ.35, கோவைக்காய் -ரூ.20 முதல் ரூ.25, குடை மிளகாய் - ரூ.60 என்ற விலைவாசியில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கோயம்பேடு மொத்த சந்தையை காட்டிலும் வெளிச்சந்தைகளில் காய்கறிகளின் விலை ரூ.10 முதல் ரூ.25 வரை கூடுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications