சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி! ஜூன் 2ல் தண்டனை விவரங்கள் அறிவிப்பு
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவத்தில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்படுவதாக சென்னை மகளிர் நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்தது. மேலும் ஜூன் 2 ஆம் தேதி ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த பெண்ணின் புகாரை வைத்து ஞானசேகரன் என்ற பிரியாணி கடைக்காரர் டிசம்பர் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை கோட்டூர்புரம் காவல் துறை விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.
இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி ஞானசேகரன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க சென்னை பெருநகர் காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த சிறப்பு புலனாய்வு குழு, கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை 9ஆவது நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக 100 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மார்ச் 7ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு காவல் துறை தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அனைத்து முகாந்திரங்களும் உள்ளது. இவர்தான் குற்றம் புரிந்துள்ளார் என்பதற்கு அனைத்து ஆதாரங்களும் உள்ளதால் ஞானசேகரனை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அவருடைய மனு ஏப்ரல் 8ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அன்றைய தினமே குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல், மிரட்டல் , அந்தரங்க புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட 12 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் காவல் துறை தரப்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் காவல் துறை தரப்பில் சுமார் 75 சான்று ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 20ஆம் தேதி அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நிறைவடைந்தவுடன் இரு தரப்பினரும் இறுதி வாதங்களை முன் வைத்தனர். அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேரி ஜெயந்தி, ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அறிவியல் ரீதியான ஆதாரங்களும் உள்ளன என வாதம் செய்தார். மேலும் அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே ஞானசேகரனை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என வாதம் செய்தார். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்தார்.
அதில் ஞானசேகரன் குற்றவாளி என்றும் அவருக்கு எதிரான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்களை ஜூன் 2ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் வழக்கறிஞர் மேரி ஜெயந்தி கோரிக்கை விடுத்தார்.
அதே வேளையில் தனது வியாபாரம் பாதிப்பதாகவும் தனது வயதான தாய் இருப்பதாகவும் தந்தை இல்லை என்றும் 8ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை வீட்டில் தனியே இருப்பதாகவும் தனக்கு தண்டனை குறைத்து கொடுக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications