சென்னையின் மிக முக்கிய இடத்தை.. அப்படியே செதுக்க போறாங்க.. களமிறக்கப்பட்ட இரும்பு ராட்சசன்!
சென்னை: சென்னையின் முக்கிய போக்குவரத்து வழித்தடங்களான பழைய மகாபலிபுரம் சாலை (OMR) மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) ஆகியவற்றை இணைக்கும் ₹270 கோடி மதிப்பிலான பிரம்மாண்டத் திட்டம் தற்போது வேகமெடுத்துள்ளது. இந்த இணைப்பு பாலத்திற்கான பணிகளை தடையின்றி முன்னெடுக்க, நெடுஞ்சாலைத் துறை தேவையான அனைத்து ஒப்புதல்களையும் பெற்று பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

நவீன ஆறு வழிப்பாலம்
சுமார் ₹36 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள இந்த நவீன ஆறு வழிப்பாலம், பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையின் தொடர்ச்சியாக உருவெடுக்கிறது. இது ECR சாலையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் தரைப்பகுதியை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து நான்கு மீட்டர் உயரத்தில் கட்டுமானங்கள் அமைய உள்ளதால், அதன் அடியில் படகுப் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாது.
ECR மற்றும் OMR இடையேயான பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்த இணைப்புத் திட்டம் மிக விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் முக்கிய அம்சமாக பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே இரும்புப் பாலம் கட்டப்பட உள்ளது. துரைப்பாக்கம் மற்றும் நீலாங்கரை பகுதிகளை இணைக்கும் இந்த இரும்புப் பாலத்திற்காக ₹37 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான டெண்டர் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. சோழிங்கநல்லூர், திருவான்மியூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், 36 மீட்டர் நீளமுள்ள இந்த ஆறு வழிப்பாலம் மற்றும் அணுகுசாலைகள் அமைக்கப்படவுள்ளன.
வெள்ள நீர் தடையின்றி வெளியேறவும், படகுகள் செல்லவும் வசதியாக 4 மீட்டர் இடைவெளி விடப்படும். ஏற்கனவே OMR பகுதியிலிருந்து 1.4 கிமீ நீளத்திற்கு சாலைப் பணிகள் ஒருபுறம் நிறைவடைந்துள்ளன. அடுத்த இரண்டு மாதங்களில் கால்வாயின் குறுக்கே இரும்புப் பாலம் கட்டும் பணிகள் முறைப்படி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ₹21 கோடி செலவில் வெங்கடேசபுரம்-இளங்கோ நகர் உள்ளிட்ட மூன்று பகுதிகளில் சிறிய இரும்புப் பாலங்கள் கட்டப்பட உள்ளன. 2019-லேயே இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, விரிவான வடிவமைப்புகள் தயார் நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடங்கும் கட்டுமான பணிகள்
பாலப் பணிகளைத் துவங்குவதற்கு ஏதுவாக, துரைப்பாக்கம் கால்வாய் ஓரம் வசிக்கும் 58 குடும்பங்களும், நீலாங்கரை பகுதியில் வசிக்கும் 63 குடும்பங்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட உள்ளனர். இந்தப் புனர்வாழ்வுப் பணிகள் தற்போது முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளன.
கால்வாய் கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மாற்று வீடுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக தலா ₹3.5 லட்சம் செலவில் வீடுகள் ஒதுக்கப்பட்டு, பயனாளிகள் கணக்கெடுக்கும் பணிகளைச் சென்னை மாநகராட்சி முடித்துள்ளது. இவர்கள் வெளியேறியதும், 680 மீட்டர் நீளமுள்ள சாலைப் பணிகள் முழுமையடையும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மொத்தத் திட்ட மதிப்பான ₹270 கோடியில், நிலம் கையகப்படுத்தவே ₹200 கோடி செலவிடப்படுகிறது. மீதமுள்ள ₹70 கோடி சாலை மற்றும் பாலக் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும். நீலாங்கரை நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும், விரைவில் தீர்வு கிடைத்து அங்குள்ள 63 வீடுகளை அகற்றும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications