சென்னைக்கு கலக்கல் சர்ப்ரைஸ்.. 27 ஆண்டுகளில் முதல்முறை.! ஒரே நாளில் நிரம்பிய 3 முக்கிய ஏரிகள்
சென்னை: தலைநகர் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் 27 ஆண்டுகளுக்குப் பிறகு முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 1998க்கு பிறகு ஒரே நாளில் இந்த மூன்று ஏரிகளுமே நிரம்பியுள்ளன. இதன் காரணமாக அடுத்த கோடைக் காலத்தில் சென்னைக்கு எந்தவொரு நீர்ப்பற்றாக்குறையும் இருக்காது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை மக்களுக்கு முக்கிய நீர் வழங்கும் ஏரிகளாகப் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் எந்தளவுக்கு நீர் உள்ளன என்பதைப் பொறுத்தே கோடைக் காலத்தில் சென்னையில் நீர் சப்ளை இருக்கும். நீர் அளவு குறைந்தால் சென்னையில் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும்.

பருவமழை
நடப்பு ஆண்டில் பருவமழை சிறப்பாகவே இருந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதலே மாநிலம் முழுக்க பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கடந்த நவம்பர் மாதம் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த இந்த மழையால் சென்னைக்கு நல்ல ஒரு விஷயம் நடந்துள்ளது.
27 ஆண்டுகளில் முதல் முறை
இதற்கிடையே சென்னைக்குக் குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் இப்போது நிரம்பியுள்ளன.. 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 3 ஏரிகளும் ஒரே நாளில் நிரம்பியுள்ளன. 1998ம் ஆண்டு இதேபோல புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் ஒரே நாளில் நிரம்பின. அதன் பிறகு சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் ஒரே நாளில் இந்த ஏரிகள் நிரம்பியுள்ளன.
3 முக்கிய ஏரிகள்
3,300 மி.கன அடி கொண்ட புழல் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது.. அங்கு இப்போது நீர்மட்டம் 21.20 அடியாக உள்ளது. அதேபோல 3,231 மி.கன அடி கொண்ட பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது.. அங்கு நீர்மட்டம் 35 அடியாக இருக்கிறது.. மேலும், 3,645 மி.கன அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது.. அங்குக் கூட நீர்மட்டம் 24 அடியாக இருக்கிறது.
சென்னைக்கு நீர் வழங்கும் முக்கியமான 5 ஏரிகளில் இப்போது நீர் இருப்பு 95.02%ஆக இருக்கிறது. இதனால் 18 மாதங்களுக்கு, குறிப்பாக அடுத்த கோடைக் காலத்திற்கு எந்தவொரு நீர்ப் பற்றாக்குறையும் இருக்காது என்றே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை மழை
நமது சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் அணைகளில் நீர் எந்தளவுக்கு இருக்கிறது என்பதே முக்கியமாகக் கவனிக்கப்படும். ஏனென்றால் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு சென்னையில் பெரியளவில் மழை இருக்காது. ஓரிரு முறை மழை பெய்தாலும் கூட பருவமழைக் காலத்தில் பெய்வதைப் போல மழை இருக்காது. இதனால் டிசம்பரில் நீர் எவ்வளவு இருக்கிறதே.. அதைப் பொறுத்தே கோடைக் காலம் இருக்கும்.
சென்னை மற்றும் புறநகரில் கடைசியாக ஏற்பட்ட மிக மோசமான நீர்ப் பற்றாக்குறை என்றால் அது 2019ல் ஏற்பட்டது தான். அப்போது புழல், செம்பரம்பாக்கம் உட்பட நகரின் முக்கிய நீர் ஆதாரங்களில் நீர் இல்லாமல் போனது. இதனால் நகரில் பெரும்பாலான இடங்களில் குடிநீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போது பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகே நிலைமை சீரானது. மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications