முழு கொள்ளளவை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி! உபரி நீர் திறப்பு அதிகரிப்பால்.. வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை: காஞ்சிபுரம் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்படும் அளவு, 2,000 கன அடியிலிருந்து 2,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. எனவே பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள இந்த ஏரி 25.51 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது . 24 அடி கொண்ட இந்த ஏரியின் நீர்மட்டம் தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று 21.64 அடியாக நீர்மட்டம் அதிகரித்து இருக்கிறது. மொத்த கொள்ளளவில் 82.99% அளவுக்கு நீர் இருக்கிறது.

இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, ஏரிக்கு நீர்வரத்து 150 கனஅடியாக இருந்தது. எனவே வினாடிக்கு 1,200 கனஅடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. ஏரிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வெளியேற்றப்படும் நீரின் அளவும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு விநாடிக்கு 2,000 கனஅடி அளவுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது வெளியேற்றப்படும் நீரின் அளவு 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இரவு இந்த நீரின் அளவு 3,000 எட்டும் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications