ஞானசேகரன் தீர்ப்பு: சின்னபுத்தி கொண்டோர் சிலரின் எண்ணம் தவிடுபொடியாகியுள்ளது - ஸ்டாலின் கருத்து
சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை என்றும், இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகி உள்ளது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி காவல் துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில் அதற்கு அடுத்த நாளே ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்த 5 மாதங்களில் இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிறையில் ஞானசேகரனுக்கு எந்த சலுகைகளும் வழங்கக் கூடாது. 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனையை குற்றவாளி ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
மேலும், கூடுதலாக 90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. 11 குற்றச்சாட்டுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த ஒரு இரக்கமும் காட்டக் கூடாது என்றும், அதிகபட்சமான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல் துறை என்றும், இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகி உள்ளது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை. விசாரணையின் போது, உயர்நீதிமன்றமே பாராட்டிய வகையில், சென்னை மாணவி வழக்கினை நியாயமாகவும் விரைவாகவும் ஐந்தே மாதத்தில் நடத்தி முடித்து, குற்றவாளிக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்.
தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த வழக்கில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக மகளிர் நீதிமன்றமும் முன்வந்து பாராட்டி இருக்கிறது. இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது.
பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் நாம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்துக்கு ஏற்ப, இவ்வழக்கில் remission உள்ளிட்ட எந்தச் சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றிகூறி வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications