ஆவடி, தாம்பரம்.. புதிதாக உதயமான 2 போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள்.. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆவடி மற்றும் தாம்பரம் புதிய காவல் ஆணையரகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
நிர்வாக வசதிக்காக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம், ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் என 3 ஆக பிரித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசாணை வெளியிடப்பட்டது.
மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்ட 3 மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் காவல் நிலையங்கள் எவை என்று கடந்த ஒரு வாரமாக உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி எல்லைகள் பிரிக்கப்பட்டது.

புதிய காவல் ஆணையரகங்கள்
அந்த வகையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகங்களுக்கு உளவு பிரிவு, நிர்வாக பிரிவு, சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து என அனைத்து பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் துறை ஆணையர் கட்டுப்பாட்டில், அதாவது சென்னை மாவட்டத்தில் பூக்கடை காவல் நிலையம் முதல் ராயலா நகர் காவல் நிலையங்கள் வரை மொத்தம் 104 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளடக்கியுள்ளது.

எல்லைகள் பிரிப்பு
ஆவடி மாநகர காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் சென்னை மாவட்டத்தில் 20 காவல் நிலையங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் 5 காவல் நிலையங்கள் என மொத்தம் என 25 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் சென்னை மாவட்டத்தில் 13 காவல் நிலையங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 காவல் நிலையங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 காவல் நிலையங்கள் என மொத்தம் 20 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.

புதிய அதிகாரிகள்
அம்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஆவடி காவல் ஆணையர் அலுவலகம் அமைந்துள்ளது. அதேபோல் சோழிங்கநல்லூரில் உள்ள பெரும்பாக்கம் சாலையில் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் அமைந்துள்ளது. அதன்படி தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரியாக கூடுதல் டிஜிபி ரவி, ஆவடி காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய காவல் ஆணையரகத்தை திறந்து வைக்கும்போது தாம்பரம் கமிஷனராக கூடுதல் டிஜிபி ரவி, ஆவடி கமிஷனராக கூடுதல் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் சிறப்பு அதிகாரியாக பதவியேற்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
இன்று முதல் தாம்பரம் மற்றும் ஆவடி என தனித்தனியாக போலீஸ் கமிஷனர் அலுவலகம் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆவடி மற்றும் தாம்பரம் புதிய காவல் ஆணையரகத்தை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications