ஓபிஎஸ்சை பாராட்டிய முதல்வர்! அதிமுகவில் சலசலப்பு.. தான் சார்ந்த குடும்பம், “தனிப்பட்ட உதவி” ஆனது!
சென்னை: இலங்கைக்கு தமிழக அரசு அனுப்பும் நிவாரண உதவிகளுக்கு 'தான் சார்ந்த குடும்பத்தின்' சார்பாக 50 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என கூறிய ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் ஸ்டாலின் பாராட்டிய நிலையில், அதிமுக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஓபிஎஸ் அவர்கள் தனிப்பட்ட முறையில் 50 லட்சம் தருவதாக பதிவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு சுமார் 40 ஆயிரம் டன் அரிசி, மருந்துகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அனுப்ப தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இலங்கைக்கு மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.

சிறப்பு தீர்மானம்
ஆனால் அக்கடிதத்திற்கு மத்திய அரசிடம் இருந்து பதிலோ அனுமதியோ கிடைக்கவில்லை.இதனையடுத்து நிவாரண பொருட்களை வழங்க அனுமதி கோரி தமிழக சட்டசபையில் நேற்று சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த சிறப்பு தீர்மானத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த நிலையில், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பேசிய நிலையில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஓபிஎஸ் நிதியுதவி
இதற்கு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு கொடுத்த நிலையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தீர்மானத்தின் மீது பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம்," இந்த தீர்மானத்தை அதிமுக முழு மனதோடு வரவேற்கிறது, தமிழக அரசின் முயற்சிகளுக்கு அதிமுக ஒத்துழைப்பு அளிக்கும், இலங்கை மக்களுக்கு தான் சார்ந்திருக்கும் குடும்பத்தின் சார்பில் 50 லட்சம் ரூபாய் தர தயார் எனவும், மனிதநேயத்திற்கு அடையாளமாக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் தீர்மானம் இது" எனப் பேசினார்.

முதல்வர் பாராட்டு
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் நிதியுதவி செய்ய முன்வந்ததற்கு நன்றி எனவும், தன்னைப்போல பிறரும் உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஓபிஎஸ் கூறியுள்ளார் என பாராட்டினார். திமுக மீது பிற அதிமுக நிர்வாகிகள் சட்டசபையில் ஆவேசமாக வார்த்தைப்போரில் ஈடுபட்டு வரும் நிலையில், முதல்வர் ஓபிஎஸ்ஸை சட்டசபையில் வெளிப்படையாக பாராட்டியது அதிமுக நிர்வாகிகள் "சிலரை" அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியது.

அதிமுகவில் சலசலப்பு
இந்நிலையில், தான் சார்ந்திருக்கும் குடும்பம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறிய நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான AIADMK @AIADMKOfficial-ல் "இலங்கை மக்களுக்கு நிவாரணமாக தனிப்பட்ட முறையில் ₹50 லட்சம் தருவதாக மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் திரு.@OfficeOfOPS அவர்கள் சட்டப்பேரவையில் அறிவிப்பு." என பதிவிடப்பட்டுள்ளது. இதற்கு பின்னணியில் அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் இருப்பதாகவும், நிர்வாகிகளை ஆலோசிக்காமல் அறிவித்தற்கு எதிர்ப்பு கிளம்பியதாகவும், இதனால் "தான் சார்ந்த குடும்பத்தின்" சார்பில் இருந்த உதவியானது, "தனிப்பட்ட உதவி" ஆக மாறியதாகக் கூறப்படுகிறது. அதாவது தான் சார்ந்த குடும்பம் என்று அதிமுகவை ஓபிஎஸ் மறைமுகமாக குறிப்பிட்டதாகவும், ஆனால் கட்சியின் பிற மூத்த தலைவர்களிடம் ஓபிஎஸ் முன்கூட்டியே இதுகுறித்து விவாதிக்காததால், பிறகு அவைக்கு வெளியே அது விவாதத்திற்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது. ஓபிஎஸ் 50 லட்சம் உதவி என்று அறிவித்தபோது கூட இருந்த பல அதிமுக உறுப்பினர் மேஜையை தட்டவில்லை.. உணர்ச்சிகளை வெளிக்காட்டவில்லை. ஏனெனில் அவர்களுக்கு அது முன்கூட்டியே தெரியாது என்று ஒரு தகவல் உள்ளது. எனவேதான், அதிமுக சீனியர்கள், இதை ஓபிஎஸ்சின் தனிப்பட்ட நிதியுதவி என்ற ரீதியில் கொண்டு செல்வதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications