சென்னை கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனையில் இவ்வளவு வசதிகளா.. முதல்வர் சொன்ன சூப்பர் விஷயம்
சென்னை கொளத்தூர் தொகுதியில் பெரியார் அரசு மருத்துவமனையை திறந்து வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடிய உங்கள் எல்லாரையும் நம்முடைய தலைமை செயலாளர் வரவேற்றார்.. ஆனால் நான் தான் வரவேற்கும் இடத்தில் இருக்கிறேன்.. ஏனென்றால் இது நம்ம தொகுதி.. எப்போதும் இது என்னுடைய தொகுதி என்று சொல்ல மாட்டேன்.. நம்முடைய தொகுதி என்று தான் சொல்வேன்..
அந்த உணர்வோடு கொளத்தூர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக, உங்கள் வீட்டு பிள்ளையாக, உங்களில் ஒருவனாக இருந்து நான் வரவேற்கிறேன். பொதுவாக என்னுடைய பிறந்த நாள் வரும் போது, மக்கள் நலனுக்கு நெருக்கமான திட்டங்களை தொடங்கி வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன்..

அதுவும் ஆட்சிக்கு வந்த உடன், இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக வேலைவாய்ப்புகளை அவர்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக, திறன் மிக்கவர்களாக, எல்லா திறனும் கொண்டவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.. இதற்காக எனது கனவுத்திட்டமான நான் முதல்வர் திட்டத்தை 2022ல் தொடங்கினோம். அந்த கனவுத்திட்டம் நினைவாகி, இதுவரை 41 லட்சம் பேருக்கு பயிற்சி கொடுக்கிறோம். அவர்களில் 2 லட்சத்து 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள், முன்னணி நிறுவனங்களில் வேலைக்கு போயிருக்கிறார்கள்..
அது மட்டுமல்ல.. நான் முதல்வன் உயர்வுக்கு படி என்ற திட்டத்தின் மூலமாக உயர் கல்வியில் இடைநின்ற 77 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வி பயில வழிவகை செய்துள்ளோம். ஒன்றிய அரசு பணியில் சேருவதற்கு தயாராகும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம் மூலமாக ஊக்கத்தொகை வழங்குகிறோம். இப்படி நம்ம பசங்களோட கல்விக்காக செய்வதைவிட வேறு என்ன மகிழ்ச்சி இருக்கும்.
2023ல் விளிம்பு நிலை மக்களுக்காக மனித கழிவுகளை மனிதரே அகற்றும் அவலத்தைமாற்றுவதற்காக, அதற்கான கருவிகளை அவர்களுக்குத் தந்து தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தை அறிவித்தேன். அந்த திட்டம் மூலமாக இதுவரை 202 பேர் தொழில் முனைவோர் ஆகியுள்ளனர். தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரமும் மேம்பட்டிருக்கிறது.. 2024ல் சென்னை மக்களின் குடிநீர் தேவையை தீர்த்து வைக்க நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திறந்து வைத்தேன். அத்துடன் இந்த ஆண்டு நமது கொளத்தூர் தொகுதியில் மாபெரும் மருத்துவமனையை அறிவித்தேன்..அதன்படியே எழுப்பியுள்ளோம்.. இந்த மருத்துவமனை வட சென்னை மக்களுக்கு உயிர் காக்கும் மருத்துவமனையாக காலகாலத்திற்கு செயல்பட இருக்கிறது.
வடசென்னையை வளர்ந்த சென்னையாக்க, நாம் எடுத்துக் கொண்டு வருகிற முயற்சியில் இந்த பெரியார் மருத்துவமனை என்பது ஒரு மைல்கல்.. இந்த மருத்துவமனையை உருவாக்க பாடுப்பட்ட எவ வேலு அவர்களுக்கும், அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்களுக்கும், அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..இந்த மருத்துவமனைக்கு பெயர் வைப்பது குறித்து சேகர்பாபு என்னிடம் கேட்டார். அப்போது அவரிடம் நான் தான் பெரியார் நகரில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு பெரியார் பெயரை வைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னேன். ஏனெனில் சமுதாயத்தில் பகுத்தறிவு ஊட்டிய சமூக மருத்துவர் அவர்.. இதை நினைத்து தொண்டனாக பெருமகிழ்ச்சி அடைகிறேன்..
கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி 3 தளங்கள் இருக்கும் மருத்துவமனைக்கு தான் அடிக்கல் நாட்டினோம். இதை மக்களுக்கு தேவை காரணமாக விரிவாக்கம் செய்து அடிக்கல் நாட்டினோம்.. இன்றைக்கு 613 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவில் , ஆறு அடுக்கு தளங்கள் கொண்ட 560 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஆறு அறுவை சிகிச்சை அரங்கம், நவீன ரத்த வங்கி. புற்றுநோய் பிரிவு, இதய நலப்பிரிவு, குழந்தைகள் பிரிவு, நரம்பியல் பிரிவு, மகப்பேறு பிரிவு என எல்லா வசதிகளுடன் இந்த மருத்துவமனை பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications