சேப்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி ஸ்டாண்ட்.. ஒரே மேடையில் ஸ்டாலின், தோனி, உதயநிதி.. நாளை திறப்பு!
சேப்பாக்கம் மைதானத்தில் கலைஞர் கருணாநிதி ஸ்டாண்டை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் அமைந்துள்ள ஸ்டாண்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதில் சிறப்பு விருந்தினராக சென்னை அணி கேப்டன் தோனி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனுக்கு பிறகு இந்தியாவில் 2-வது மிக பழமையான கிரிக்கெட் மைதானம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகும்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள் மற்றும் உள்ளூர் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

சேப்பாக்கம் மைதானம்
2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிக்காக சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு பகுதியாக புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள அண்ணா பெவிலியன் பகுதி இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கும் அறை, அலுவலகங்கள், ரசிகர்கள் அமரும் இடம் உள்ளிட்டவை புதிதாக கட்டப்பட்டன.

சிறப்பு விருந்தினராக தோனி
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பெவிலியன்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார். இந்த விழா நாளை மாலை 5.30 மணிக்கு நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் ஐசிசி சேர்மன் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளார்கள். சிறப்பு விருந்தினராக சிஎஸ்கே கேப்டன் தோனி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் கருணாநிதி ஸ்டாண்ட்
அதுமட்டுமல்லாமல் சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இருக்கை பகுதிக்கு முன்னாள் கலைஞர் கருணாநிதி ஸ்டாண்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டாண்டை திறந்த பின், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 38 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அமர்ந்து கிரிக்கெட் பார்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

அண்ணா பெவிலியனை திறந்து வைத்த கருணாநிதி
சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள அண்ணா பெவிலியனை கருணாநிதி திறந்து வைத்தார். இப்போது கருணாநிதி பெயரிலான ஸ்டாண்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி வரும் 22ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் புதிய ஸ்டாண்டுகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications