ரயிலில் வேலூர் புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்.. பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை திறந்துவைத்தார்
சென்னை: வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்றும் (ஜூன் 25), நாளையும் (ஜூன் 26) நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கள ஆய்வு மேற்கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயில் மூலமாக காட்பாடிக்கு புறப்பட்டார். வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்றும் (ஜூன் 25), நாளையும் (ஜூன் 26) பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கள ஆய்வு மேற்கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் பயணம் மேற்கொண்டார். இதற்காக இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.25 மணிக்கு புறப்பட்ட சாய்நகர் சீரடி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். இந்த ரயில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு மதியம் 12.10 மணியளவில் சென்றடைந்தது.

அமைச்சர் துரைமுருகன் தலைமையில் காட்பாடி ரயில் நிலையத்தில் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மருத்துவமனையின் வளாகத்தில் ரூ. 150 கோடி மதிப்பில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, காணொலி வாயிலாக 9 புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்துவைத்தார். மாலை 5 மணியளவில் காரில் புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கெங்கநல்லூர் சந்தைமேட்டிற்கு செல்கிறார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயம், நூலகம் ஆகியவற்றை திறந்துவைக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளின் திறப்பு விழா, கள ஆய்வை முடித்துவிட்டு ஜூன் 26 ஆம் தேதி திருப்பத்தூரில் இருந்து ரயில் மூலம் முதல்வர் சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications