உங்கள் பேச்சு பலவீனமாக மாறிவிட கூடாது... பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஸ்டாலின் அறிவுரை
சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று பேசுகையில், அவதூறுகளுக்கு பிடிஆரின் சொல்லாற்றல் அவர்களுக்கு அவலாக மாறிவிடக்கூடாது.. இதனை கழக்கத் தலைவராக மட்டுமல்ல... அவர் மீது உள்ள அக்கறையில் அறிவுரை வழங்க கடமைப்பட்டுள்ளேன்... என் சொல்லை தட்டாத பிடிஆர்.. எனது அறிவுரையையும், ஆழத்தையும் நிச்சயம் புரிந்து கொள்வார் என நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.
'தமிழ்வேள் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு' நூல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை நடந்தது. இந்த விழாவின் முதல்வர் ஸ்டாலின்,அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் துரைமுருகன் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை பொறுத்தவரை அறிவார்ந்த, வலிமையான வாதங்களை வைக்கக்கூடியவர்.. நான் அவருக்கு கூற விரும்புவது.. இந்த சொல்லாற்றல் அவருக்கு பலம்... அவரது சொல்லாற்றால் அவருக்கு பலமானதாக மட்டுமே இருக்க வேண்டும். பலவீனமாக மாறிவிட கூடாது..இதை ஏன் சொல்கிறேன் என அவருக்கு தெரியும்.. நமது எதிரிகள் வெறும் வாயை மெல்லக்கூடிய விநோத ஆற்றலை பெற்றிருக்கிறார்கள்..
அவர்களின் அவதூறுகளுக்கு உங்களது சொல்லாற்றல் அவர்களுக்கு அவலாக மாறிவிடக்கூடாது.. இதனை கழக்கத் தலைவராக மட்டுமல்ல... உங்கள் மீது உள்ள அக்கறையில் அறிவுரை வழங்க கடமைப்பட்டுள்ளேன்... என் சொல்லை தட்டாத பிடிஆர்.. எனது அறிவுரையையும், ஆழத்தையும் நிச்சயம் புரிந்து கொள்வார் என நம்புகிறேன்.
இந்த நூலில் பிடிஆரை பற்றி மட்டுமல்லாமல், நீதி கட்சியின் வரலாறையும், நீதி கட்சியின் செயல்பாடுகளையும், தலைவர்கள் பற்றியும் அறிய முடியும்.. பிடிராஜனுக்கு பழனிவேல் தியாகராஜன் மட்டுமல்ல.. நானும் வாரிசு தான்.. நாங்கள் திராவிட வாரிசுகள்.. இங்கு அமர்ந்துள்ள எல்லாருமே (கூட்டத்தில் உள்ளவர்கள்) திராவிட வாரிசுகள் ஆவார்.. இன்றைக்கு வாரிசு என்ற சொல்லை கேட்டாலே பலருக்கு பற்றிக்கொண்டு எரிகிறது. அவர்களுக்கு எரியட்டும் என்று தான் நான் திரும்ப திரும்ப செல்கிறேன்...
இப்போது எப்படி திராவிடத்தை ஒழிப்போம் என சில கைக்கூலிகள் பேசுகிறார்களோ.. அதுபோல் பிடி ராஜன் காலத்திலும் நீதி கட்சியை குழி தோண்டி புதைத்துவிடுவேன் என்று ஒரு தலைவர் சொன்னார்.. ஆனால் பிடி ராஜனுக்கு தொடர்ச்சியாக பிடிஆர் பழனிவேல் வந்தார்.. அதன்பிறகு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்துள்ளார்.." இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக நேற்று சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது, கூடலூர் எம்எல்ஏவான அதிமுகவைச் சேர்ந்த பொன்.ஜெயசீலன் (அதிமுக)இ கூடலூர் தொகுதியில் சிறு தகவல் தொழில்நுட்ப பூங்கா (நியோ டைடல் பார்க்) அமைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளிக்கையில், துறையில் உள்ள சிக்கல்கள் குறித்து இந்த கூட்டத் தொடரிலேயே எனது உரையில் கூறியிருக்கிறேன்.. எனது ஐடி துறைக்கு நிதியும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை போல, எல்லா ஐ.டி. பூங்காக்களும் எங்கள் ஐடி துறையின் கீழ் செயல்படுவது இல்லை.
டைடல் பூங்கா, நியோ டைடல் பூங்கா ஆகியவை தொழில் துறையின் கீழ் தான் செயல்படுகின்றன. அசாதாரண சூழ்நிலையாக இருந்தாலும், அதுதான் 20 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறதோ, அவரிடம் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் செய்து கொடுப்பார்கள் என்றார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் இதையெல்லாம் முதல்வருடன் உள்ளுக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். பாசிட்டிவாக பதில் சொன்னால் உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்றார்..
இதை கண்ட நெட்டிசன்கள், தன்னுடைய துறையில் நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என பேரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசும் அளவிற்கு அவர் அமைச்சரவையில் டம்மியாக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்க தொடங்கினார்கள். இதைத்தான் மறைமுகமாக குறிப்பிடும் வகையில், முதல்வர் ஸ்டாலின் இன்று, அவதூறுகளுக்கு பிடிஆரின் சொல்லாற்றல் அவர்களுக்கு அவலாக மாறிவிடக்கூடாது.. இதனை கழகத் தலைவராக மட்டுமல்ல... அவர் மீது உள்ள அக்கறையில் அறிவுரை வழங்க கடமைப்பட்டுள்ளேன்... என் சொல்லை தட்டாத பிடிஆர்.. எனது அறிவுரையையும், ஆழத்தையும் நிச்சயம் புரிந்து கொள்வார் என நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications