மார்ச் 1 ஸ்டாலினுக்கு 70வது பிறந்தநாள்! பிரம்மாண்ட பொதுக்கூட்டம்! அணிதிரளும் தேசியத் தலைவர்கள்!
70வது வயதில் அடியெடுத்து வைக்கவுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னை: மார்ச் 1ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 70வது பிறந்தநாள் வருவதால் அன்றைய தினம் சென்னையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது திமுக தலைமைக் கழகம்.
இந்த பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுனே கார்கே, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ், ஃபரூக் அப்துல்லா, உள்ளிட்ட தேசியத் தலைவர்களும் திமுக கூட்டணி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;

70வது பிறந்தநாள்
தந்தை பெரியாரின் கொள்கை உறுதியையும், பேரறிஞர் அண்ணாவின் நடைமுறை அரவணைப்பையும், அண்ணன் தலைவர் கலைஞர் அவர்களின் சலியாத போராட்டக் குணத்தையும், இனமானப் பேராசிரியரின் பொறுமைக் குணத்தையும் ஒருங்கே பெற்று - அவர்கள் நால்வரையும் தன்னுள் அடக்கிச் செயல்படும் ஆற்றலாளரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது எழுபதாவது பிறந்தநாளை ஏற்றத்துடனும் எழுச்சியுடனும் கொண்டாட திராவிட முன்னேற்றக் கழகம் முடிவெடுத்துள்ளது.

மார்ச் 1 பொதுக்கூட்டம்
தலைமை கழகத்தின் சார்பில், மார்ச் 1 - மாலை 5.00 மணி அளவில் சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், திராவிட நாயகன் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது என்பதை அறிவிப்பதில் பெருமை அடைகிறேன். இந்த விழாவுக்கு தலைமை வகிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு வரவேற்புரை ஆற்றுகிறார்.

தேசியத் தலைவர்கள்
இந்தியாவில் இருக்கும் முதலமைச்சர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கக் கூடிய மு.க.ஸ்டாலின் அவர்களை வாழ்த்திப் பேசுவதற்காக இந்தியாவே வருகிறது என்று சொல்லத் தக்க வகையில் அகில இந்தியத் தலைவர்கள் அணிவகுக்க இருக்கிறார்கள். அகில இந்தியக் காங்கிரசு கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மரியாதைக்குரிய மல்லிகார்ஜூன கார்க்கே அவர்களும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா அவர்களும், சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் அவர்களும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் அவர்களும் வருகை தந்து நம் முதலமைச்சர் அவர்களை வாழ்த்த இருக்கிறார்கள். நமது தலைவர் அவர்கள் ஏற்புரை ஆற்ற இருக்கிறார்கள்.

துரைமுருகன் அழைப்பு
இந்திய அரசியல் வரலாற்றில் மகத்தான மாற்றங்களை விளைவிக்கப் போகும் மகத்தான பல்வேறு செயல்களுக்கு தொடக்கமாகவும் அமையப் போகிறது. இந்தியாவின் புதிய விடியலுக்கான பிறந்தநாளாகவும் அமையப் போகிறது. எழுச்சிமிகு இயக்கத்தின் - ஏற்றமிகு தலைவருக்கு எழுபதாவது ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல கழகத்தின் இந்நாள் - முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் - முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற இந்நாள் - முன்னாள் உறுப்பினர்கள், அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் ஆகிய உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.












Click it and Unblock the Notifications