DravidianBudget2022.. மீண்டும் "தமிழ்நாடு நம்பர் 1" என்ற நிலையை நோக்கி..முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை : திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றுக் கடமையை உணர்ந்து தமிழ்நாட்டின் நிதிநிலையை மேம்படுத்தும் திராவிட பட்ஜெட் 2022ஐ தாக்கல் செய்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள் எனவும், மீண்டும் 'தமிழ்நாடு நம்பர் 1' என்ற நிலையை நோக்கி விரைவாக நடைபோடுவோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2022-2023-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது. அப்போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்தடில் பட்ஜெட் சென்னை வெள்ளத்தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு, நகைகடன், பயிர்கடன், சுயஉதவி குழு கடன் தள்ளுபடிக்காக ரூ.4131 கோடி ஒதுக்கீடு, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை என பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டது.

பட்ஜெட்டுக்கு வரவேற்பு
தமிழக பட்ஜெட்டின் அறிவுப்புக்கு பலரும் வரவேற்பு, பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் பட்ஜெட்டில் மகளிருக்கு மாதாந்திர உதவித் தொகை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் இல்லையென அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், திராவிட பட்ஜெட் 2022-ஐ தாக்கல் செய்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவு
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றுக் கடமையை உணர்ந்து தமிழ்நாட்டின் நிதிநிலையை மேம்படுத்தும் #DravidianBudget2022-ஐ தாக்கல் செய்த மாண்புமிகு @ptrmadurai அவர்களுக்கு வாழ்த்துகள்!மீண்டும் "தமிழ்நாடு நம்பர் 1" என்ற நிலையை நோக்கி விரைவாக நடைபோடுவோம்!" என பதிவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
முன்னதாக தமிழக பட்ஜெட் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசன் இன்று காலை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கை தமிழக நிதிநிர்வாகத் துறைக்கு மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது. நிதிநிலை அறிக்கை என்ற எல்லையையும் தாண்டி, தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்கு முன்னோட்டமான கொள்கை அறிக்கையாக அது அமைந்துள்ளது.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராசன்
இந்த அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசன் அவர்களுக்கும், இந்த அறிக்கையைத் தயாரிக்க உதவிய நிதித்துறைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். கழக அரசு கடந்த ஆண்டு மே 7-ஆம் நாள் பொறுப்பேற்றது. பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளும் அதலபாதாளத்துக்குப் போனது. அதிலும் குறிப்பாக நிதித்துறை அடைந்த மிகமோசமான நிலைமை என்பது கவலைக்கிடமானது ஆகும். 5.5 லட்சம் கோடி ரூபாயைக் கடனாக வைத்துவிட்டு நிதியைச் சூறையாடிய அரசாக, அ.தி.மு.க. அரசு மக்களால் தோற்கடிக்கப்பட்டது." என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications