துண்டல் கழனியைத் துயரத்திலிருந்து மீட்ட ஸ்டாலின்.. வீட்டுக்கு 50 ஆயிரம் உதவி.. மக்கள் மகிழ்ச்சி!
சென்னை: சாதி, மதம் இல்லாத சமுதாயம். இதுதான் பெரியார் கண்ட கனவு. அந்தக் கனவை நாணவாக்கும் முயற்சியாகத் தனது ஆட்சிக்காலத்தில் மதுரை திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டையில் 1998 ஆம் ஆண்டு 'சமத்துவபுரம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி.

இந்தத் திட்டம் அன்றைக்கு மாபெரும் பேசுபொருளாகப் பத்திரிகைகளில் அலசப்பட்டது. அதற்குப் பின்னால், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் எனப் பல மாவட்டங்களில் 'சமத்துவபுரம்' உருவாக்கப்பட்டு, அங்கே ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டன.

ஒரு காலத்தில் 'ரோல் மாடல்' திட்டம் எனப் பேசப்பட்ட இதற்கு அதிமுக ஆட்சி சரியான நிதி ஒதுக்கப்படவில்லை. ஆகவே, இந்த சமத்துவபுரங்களில் வாழ்ந்து வந்த மக்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு ஆளாகினர்.

இப்போது 'திராவிட மாடல்' ஆட்சி வந்த பிறகு மு.கருணாநிதியின் 'ரோல் மாடல்' திட்டம் மறு உயிர் பெற்றுள்ளது. அதில் ஒன்று துண்டல் கழனி சமத்துவபுரம்.

இது காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், கரசங்கால் ஊராட்சியில் உள்ளது. இதைக் கடந்த 28.11.2000 ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாநகர மேயர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

அதன்பிறகு சரியான நிதி ஒதுக்கப்படாததால், வீடுகள் யாவும் சிதிலமடைய ஆரம்பித்தன. அந்த மக்களின் நிலைமையை அறிந்து புனரமைக்க வீட்டுக்குத் தலா, 50 ஆயிரம் அளித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இது குறித்து அந்தப் பகுதி மக்கள் என்ன சொல்கிறார்கள்?
"நான் மணிமங்கலத்தில் வாழ்ந்துவந்தேன். எனக்கு மூன்று பிள்ளைகள். அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி இந்த இடத்தில் வீடு கட்டிக் கொடுப்பதாக, அப்போது சொன்னார்கள். உடனே ஸ்ரீபெரும்புதூர் அலுவலகம் போய் மனு கொடுத்தேன். அதன் பிறகு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தார்கள். எல்லா ஆவணங்களையும் சரி பார்த்தார்கள். அதன்பிறகு எனக்கு இங்கே வீடு கொடுத்தார் கலைஞர்.

இங்கே உள்ள ஒன்றாம் எண் வீட்டில் நான்தான் முதன்முதலாக வந்தேன். கடந்த 23 வருடங்களாக இதே இடத்தில்தான் வசித்து வருகிறேன். எனது மூன்று பிள்ளைகளையும் படிக்கவைத்துக் கொண்டு இருக்கிறேன். இதுவே எனது ஊராக மாறிவிட்டது" என்கிறார்.

"இங்கே பல ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள். இதுவரை எங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லாமல் வாழ்ந்துவருகிறோம். இந்தப் பகுதியில் சமத்துவபுரம் வீடுகள் வந்த பிறகு, இந்த வட்டாரமே வளர்ச்சி அடைந்துவிட்டது.

நாங்கள் வரும்போது இருந்ததைவிடப் பல மடங்கு வளர்ச்சிபெற்றுவிட்டது. அதேபோல் குடிநீர் வசதி, மின்சார வசதி, நியாயவிலைக்கடை, பள்ளி, சுகாதார நிலையம், பிள்ளைகள் விளையாட மைதானம் என அனைத்துமே எங்கள் சமத்துவபுரத்திற்கு உள்ளாகவே இருக்கின்றன" என்கிறார் ஒரு பாட்டி.

"இங்கே எல்லா சாதியைச் சேர்ந்த பிள்ளைகளும் ஒரே பள்ளிக்கூடத்தில்தான் படிக்கிறார்கள். நாங்கள் தண்ணீர் பிடிப்பது, ரேஷன் கடைக்குப் போவது என அனைத்தையும் எல்லா சாதியைச் சேர்ந்த மக்களுடன்தான் பகிர்ந்து கொண்டு வாழ்கிறோம்.

இப்போது இந்த வீடுகளுக்கான பட்டா வழங்க இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதற்கான வேலைகள் நடந்துவருகின்றன. அதிகாரிகள் ஆவணங்களைப் பரிசோதித்து வருகிறார்கள். விரைவில் இந்த வீடுகளுக்கான பட்டாவும் எங்களுக்கே கிடைத்துவிடும்.

ஏதோ ஒரு திக்குத் தெரியாத திசையில் ஆதரவற்று இருந்த எங்களுக்குக் கலைஞர்தான் வீடு கொடுத்தார். அவர் இல்லை என்றால் நாங்கள் எல்லாம் இந்த ஜென்மத்தில் சொந்த வீட்டில் வாழ்ந்து இருக்க முடியாது. கூலி வேலைக்குப் போய் சம்பாதிக்கும் காசை வாடகை கொடுத்தே அழித்திருப்போம்" என்கிறார் இன்னொரு பெண்மணி.

"எனக்கு 2003இல் இந்த சமத்துவபுரம் காலனியில் அப்போது முதலமைச்சரா இருந்த மு.கருணாநிதி வீடு கொடுத்தார். வீடு கொடுக்கும் போதே டிவியும் கொடுத்தார். நானும் என் கணவரும் மகனுமாக மூன்று பேரும் சேர்ந்து மு.கருணாநிதி கையால் டிவியை வாங்கினோம். அந்த போட்டோகூட வீட்டில் இப்போது இருக்கிறது.

இந்த சமத்துவபுரம் வீடு கட்டும் போதே நான் இங்கே கட்டிட வேலையும் பார்த்திருக்கிறேன். கல், மண் கூட சுமந்து இருக்கிறேன். அன்றைய கலெக்டர் கூட, "நீ பட்ட கஷ்டங்களுக்கு ஈடாக இந்த வீடு உனக்குக் கிடைத்திருக்கிறது" என்று சொன்னார்" என்கிறார் இதே சமத்துவபுரத்தில் 2 ஆம் நம்பர் வீடு கிடைத்த இல்லத்தரசி.

"நான் மணிமங்கலத்தில்தான் வாழ்ந்துவந்தேன். இங்கே வீடு கட்டித் தருவதாக அப்போதையை முதல்வர் கருணாநிதி சொன்னார். அதற்கு என் கணவர் விண்ணப்பித்தார். வீடும் கிடைத்தது.
அதற்கு முன்பாக வாடகைக்குத்தான் இருந்து வந்தேன். இந்த சொந்த வீடு கிடைத்ததால்தான் நாங்கள் இத்தனைக் காலம் நிம்மதியாக வாழ முடிந்தது. என் கணவர் இப்போது இல்லை. அவர் இறந்துவிட்டார். ஆகவே, இந்த வீடு எனக்குப் பல விதங்களில் பயன் உள்ளதாக இருக்கிறது.

இந்த வீடுகள் கட்டி பல வருடங்கள் ஆகிவிட்டன. எனவே மழைக்காலங்களில் லேசாக ஒழுக்க ஆரம்பித்தது. அதற்கும் நாங்கள் மனு எழுதிக் கொடுத்தோம். அதைப் பார்த்து முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுக்கு 50 ஆயிரம் கொடுத்தார். அதை வைத்து வீட்டைச் சீர் செய்தோம். இப்போது பிரச்சினை இல்லை" என்கிறார் கணவனை இழந்த இந்தப் பெண்
"இங்கே 100 வீடுகள் இருக்கின்றன. யார் யார் என்ன சாதி என்று தெரியாது. ஆனால், எல்லா விசேஷத்திற்கும் ஒன்றாகக் கூடி வாழ்ந்துவருகிறோம். அதேபோல் இங்கே சமுதாய நலக்கூடம் உள்ளது. அதில்தான் எங்கள் வீட்டு எல்லா நிகழ்ச்சியையும் நடத்துவோம். எங்களைப் போலவே எல்லோரும் ஒற்றுமையா ஜீவிக்கவேண்டும்" எனக் கொஞ்சம் மலையாளம் கலந்து தமிழில் பேசுகிறார் ஒரு பாட்டி.
கரசங்கால் ஊராட்சி மன்றத் தலைவர் வி.சுதாகர், "இது ரிசர்வ் தொகுதி. எங்கள் ஊராட்சியில் மொத்தம் 4 குக்கிராமங்கள் உள்ளன. அதில் சமத்துவபுரமும் ஒன்று. நான் தலைவராக வெற்றிபெற்ற உடன் நமது பகுதி சமத்துவபுரத்திற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறேன்.
சிமெண்ட் சாலை, காலை மற்றும் மாலை நேரங்களில் தேவைக்கு போதுமான அளவு குடிநீர் வசதி, சமுதாயக் கூடம் புனரமைப்பு, குடிநீர்த் தொட்டி புனரமைப்பு செய்ததுடன் அனைத்து வீடுகளையும் புனரமைக்க தலா 50 ஆயிரம் பெற்றுத் தந்துள்ளோம்" என்கிறார்.












Click it and Unblock the Notifications