சட்டை மட்டுமல்ல மொத்தமும் கழன்று போகப்போகிறது.. ஜெயக்குமார் "சம்பவம்" பற்றி முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை : முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் சட்டத்தைத் தன் கையிலே எடுத்துக்கொண்டு, திமு கழக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்தியிருக்கிறார். கழகம் இதனைச் சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும். அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள் என்பது நிச்சயம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், சென்னை ராயபுரத்தில் 49வது வார்டில் திமுகவினர் சிலர் அத்துமீறி வாக்குச் சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக தரப்பில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனிடையே கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகி ஒருவரை அதிமுகவினர் மடக்கி பிடித்தனர். ஜெயக்குமார் முன்னிலையிலேயே அவரை சிலர் தாக்க தொடங்கினர். அப்போது, பிடிபட்ட அந்த நபரிடம் சட்டையை கழட்டும்படி கடுமையாக ஜெயக்குமார் கூறினார்.

சென்னையில் சர்ச்சை
அந்த நபரின் சட்டை கழற்றப்பட்டு அவரது கைகளும் கட்டப்பட்டன. பின்னர், சட்டை இல்லாமல், அவர் அரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். 'வேற வார்டை சேர்ந்த உனக்கு இங்கு என்ன வேலை என்றும், திமுகவைச் சேர்ந்த நீ எத்தனை கள்ள வாக்குகளை போட்டாய்' என்றும் அவரிடம் ஜெயக்குமார் கேள்வி கேட்டார்.

ஜெயக்குமார் மீது வழக்கு
இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அவரது ஆதரவாளர்கள் 95 ஆண், 15 பெண்கள் என 110 நபர்கள் மீது ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக அடித்து இழுத்துச் சென்றதில் தண்டையார்பேட்டை போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் கடிதம்
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு ஒட்டி தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ள திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் நம் உடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் கடிதம் எழுதியுள்ளார் அதில் அமைச்சர் ஜெயக்குமார் திமுக நிர்வாகியை அரை நிர்வாணமாக அழைத்துச் சென்றது குறித்தும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

அம்பலப்படுத்தப்படுவார்கள்
அதில், " வாக்கு எண்ணிக்கை மையங்களில் அ.தி.மு.க.வினர் எந்த அளவுக்கு எல்லை மீறிச் செல்வார்கள் என்பதை அ.தி.மு.க ஆட்சியில் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின்போது நேரில் கண்டு அறிந்தவன் நான்.: எனக் கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், " முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் அவர்கள் சட்டத்தைத் தன் கையிலே எடுத்துக்கொண்டு, தி.மு.கழக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்தியிருக்கிறார். கழகம் இதனைச் சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும். அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள் என்பது நிச்சயம்.:" எனவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications