எனது மைத்துனர் சிபாரிசு கேட்காதவர்! குடும்பத்தோடு நேரம் செலவிட முடியாத ஆதங்கம் உண்டு! -ஸ்டாலின்
சென்னை: தனது மைத்துனர் இல்ல மண விழாவை தலைமை தாங்கி நடத்தி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், அவரைப் பற்றியும் அவர் சிபாரிசு கேட்காமலேயே மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தது பற்றியும் பெருமிதத்தோடு பேசினார்.
மேலும், குடும்பத்தாரோடு அதிக நேரம் எங்களைப் போன்றவர்கள் செலவு செய்ய முடியாது என்கிற ஒரு ஆதங்கம் எல்லோர் குடும்பத்திலும் உண்டு எனவும் அவர் கூறியுள்ளார்.
துர்கா ஸ்டாலின் சகோதரர் டாக்டர் ராஜமூர்த்தி இல்லமண விழாவில் அவர் பேசியதாவது;

''வழக்கமாகத் தொடர்ந்து பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுகிற காரணத்தால், பெரும்பாலும் குடும்பத்தாரோடு அதிக நேரம் எங்களைப் போன்றவர்கள் செலவு செய்ய முடியாது என்கிற ஒரு ஆதங்கம் எல்லோர் குடும்பத்திலும், குறிப்பாக கழகக் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் உண்டு. என்னுடைய குடும்பத்திற்கும் நிச்சயம் இருக்கும்.
மணமகனுடைய தந்தை - என்னுடைய மைத்துனர் டாக்டர். ராஜமூர்த்தி சிறப்புகளை - பெருமைகளை இங்கு உரையாற்றியவர்கள் அத்தனை பேரும் குறிப்பிட்டுச் சொன்னார்கள். அவர் திராவிட இயக்கத்திற்காக, தமிழினத்திற்காக, தமிழ்ச் சமுதாயத்திற்காக என்னென்ன பணிகளை எல்லாம் ஆற்றிக் கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றி சுருக்கமாகச் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்கள்.
நான் ஒரு பட்டியலோடு வந்திருக்கிறேன். அவர் ஒரு பன்முக திறமையாளராக இருக்கக் கூடியவர். படிப்பில் மிக மிக ஒரு கெட்டிக்காரராக, 1982-இல் சிபாரிசின் அடிப்படையில் அல்ல, மதிப்பெண் பெற்ற அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்து, இன்றைக்கு ஒரு சிறந்த மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருப்பவர். குழந்தை நல மருத்துவராக, ESI மருத்துவமனையின் இயக்குநராக, தமிழ்ப்பற்று கொண்டவராக, முற்போக்குச் சிந்தனை கொண்டவராக, பட்டிமன்றப் பேச்சாளராக, இலக்கியச் சொற்பொழிவாளராக, ஆன்மீகச் சொற்பொழிவாளராக, கவிதை புனையும் ஆற்றலைப் பெற்றவராக என ஒரு பன்முகத்தன்மையைக் கொண்டவராக விளங்கிக் கொண்டிருப்பவர் நம்முடைய டாக்டர். ராஜமூர்த்தி.
'நேசம் விரும்பும் நெருப்பு பூக்கள்', 'எனது அம்பறாத் தூணியில் இருந்து' என்ற புரட்சிகரமான கவிதை நூல்களை எழுதி வெளியிட்டு இருப்பவர். 'குறள்வழியில் அருட்செல்வர்', 'சிலப்பதிகாரத்தில் அறம்' என்ற கட்டுரைகளை எழுதி எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்திருப்பவர்.
ராஜமூர்த்தியை பொறுத்தவரையில் கம்பரை பற்றியும் பேசுவார்; வள்ளலாரைப் பற்றியும் பேசுவார். அந்த அளவிற்கு ஆற்றலைப் பெற்றவராக விளங்கிக் கொண்டிருப்பவர். இன்றைக்கு வள்ளலாரைப் பற்றி ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார். பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல மாட்டேன்; புலம்பிக் கொண்டிருக்கிறார் - உளறிக் கொண்டிருக்கிறார். அவர் யார் என்பதைப் பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை. அது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் அவருக்கெல்லாம் நேர்மாறாக வள்ளலார் மீது ஆழ்ந்த பற்றும் புரிதலையும் கொண்டு பேசக்கூடியவர். அவரைப் பற்றிக் கட்டுரையாக எழுதக்கூடியவர். அந்த அளவிற்கு ஆற்றலைக் கொண்டவராக விளங்கிக் கொண்டிருப்பவர்தான் டாக்டர் ராஜமூர்த்தி. இவருடைய ஆற்றலைப் பற்றி, கலைஞர் ஒருமுறை 'வள்ளல் நேசன்' என்றுகூட ராஜமூர்த்திக்குப் பாராட்டும் தந்திருக்கிறார். எனவே அப்படிப்பட்ட ஒரு ஆற்றலைப் பெற்றிருக்கும் ராஜமூர்த்தியின் அருமை மகனுக்கு நடைபெறும் இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று, உங்களோடு சேர்ந்து மணமக்களை வாழ்த்துகிற நேரத்தில் நானும் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.''












Click it and Unblock the Notifications