ஊழல் ஒழிப்பில் உறுதியாக நின்ற அதிகாரி..நல்லம்ம நாயுடு மறைவு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..நேரில் அஞ்சலி
அதிகாரபலத்தை கண்டு அஞ்சாமல் தனது பணியை செவ்வனே செய்தவர் நல்லம்ம நாயுடு. கருணாநிதியால் சரியான அதிகாரி என நியமிக்கப்பட்டவர், ஜெயலலிதாவிடம் நிலைமையை விளக்கி விசாரணை நடத்தியவர் தனது தந்தை கருணாநிதியால் அடையாளம் காட்டப்பட்டவர் என முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லம்ம நாயுடு மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முதல்வர் நேரில் அஞ்சலி
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் முக்கிய அதிகாரி நல்லம்ம நாயுடு (83) வயது மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார். நேர்மையான அதிகாரி எனப் பெயரெடுத்தவர், ஆட்சியாளர்களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் பணியாற்றியதால் ஏகப்பட்ட இன்னல்களை அனுபவித்தவர், ஓய்வுக்குப்பின் சென்னையில் வசித்து வந்த நிலையில் வயோதிகம் காரணமாக காலமானார். அவரது மறைவை ஒட்டி பெரவள்ளூரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இரங்கல் செய்தி
நல்லம்ம நாயுடு மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி, "முக்கிய ஊழல் வழக்குகளில் விசாரணை அதிகாரியாகவும் - ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் எஸ்.பி.யாகவும் இருந்து ஒய்வு பெற்ற நல்லம்ம நாயுடு அவர்கள் வயது முதிர்வு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக - எவ்வித அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் நியாயத்தையும் - நீதியையும் நிலைநாட்டும் துணிச்சல்மிக்க அதிகாரியாகப் பணியாற்றியவர். ஊழல் வழக்குகளை - குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல் வழக்குகளை விசாரித்தவர்.
உச்சநீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளிவந்தவுடன் "நீதி வென்றது" என்று அவர் அளித்த பேட்டி இன்றும் என் நினைவில் இருக்கிறது. சமீபத்தில்தான் "என் கடமை - ஊழல் ஒழிக" என்ற புத்தகத்தை என்னிடம் நேரில் வழங்கி - துறையில் தான் சந்தித்த சவால்கள் - அதை எதிர்கொண்ட விதம் ஆகியவை குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
முன்னாள் முதல்வர் கலைஞரால் விசாரணை அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டு - பொதுவாழ்வில் ஊழல் ஒழிப்பு என்பதை தனது நெஞ்சில் சுமந்து - தான் பணியாற்றிய துறைக்கும், பொதுப்பணிக்கும் இறுதிவரை விசுவாசமாக இருந்த ஒரு போராளியான காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு அவர்களின் மறைவு பேரிழப்பாகும். அவரை இழந்த சோகத்தில் வாடும் அவரது குடும்பத்தாருக்கும் - அவரோடு பணியாற்றிய சக காவல்துறையினருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் - அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என முதல்வர் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications