திருவாரூர் மண்ணின் மைந்தர்..ஆரூர்தாஸ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி..குடும்பத்தினருக்கு ஆறுதல்
சென்னை: தமிழ் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் உடலுக்கு சென்னை தி.நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். ஆயிரம் படங்களுக்கு மேல் கதை-வசனம் எழுதிய சினிமா வசனகர்த்தா ஆரூர்தாஸ், வயது முதிர்வு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவரது வயது 91.
பாசமலர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதி, திரையுலகில் தனி முத்திரை பதித்த முதுபெரும் வசனகர்த்தா திரு.ஆரூர்தாஸ் வயது முதிர்வு காரணமாக நேற்று மாலை அவரது இல்லத்தில் காலமானார்.
அவரது மறைவுக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆரூர் தாஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.

திருவாரூர் மண்ணில் பிறந்து ஆயிரம் திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரையுலகில் தனி முத்திரை பதித்த முதுபெரும் வசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள் முதுமை காரணமாக மறைவெய்தினார் என்பதை அறிந்து மிகுந்த துயரமுற்றேன் என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
தனது சொந்த ஊரான திருவாரூருடன் இயற்பெயரான ஏசுதாஸின் பிற்பாதியை இணைத்து ஆரூர்தாஸ் எனப் பெயர் வைத்துக் கொண்டு தான் பிறந்த மண்ணைப் பெருமைப்படுத்தியவர் ஆரூர்தாஸ் அவர்கள்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரது பெரும்பாலான படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய இவர், பாமரமக்கள் மனதிலும் "பாசமலர்" திரைப்பட வசனங்கள் மூலம் நீங்கா இடம் பெற்றிருப்பவர். அவரது கலைச்சேவையைப் பாராட்டி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கலைமாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்.
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை இந்த ஆண்டு ஜூன் 3-ஆம் நாள் கலைஞர் அவர்களின் பிறந்தநாளில் ஆரூர்தாஸ் அவர்களின் இல்லத்துக்கே சென்று வழங்கி மகிழ்ந்தேன்.
தன் வசனங்களின் மூலம் திரையுலகை ஆண்ட அவர் தற்போது நம்மிடம் இல்லை என்றாலும், அவர் ஆற்றிய கலைப்பணிகள் என்றென்றும் தமிழ் திரையுலகிலும், படங்களை பார்த்து ரசித்த நெஞ்சங்களிலும் நிலைத்து நிற்கும்.
கதை வசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலை உலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தற்போது ஆரூர்தாஸ் இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். ஆரூர்தாஸ் உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு மந்தைவெளி கல்லறைத் தோட்டத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications