’ஆக.30’ தேதி குறித்த முதல்வர் ஸ்டாலின்! ஆளுநருக்கு கேட் போட பிடித்த ரூட்! உதயமாகிறதா புது கொள்கை?
சென்னை : தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், வருகின்ற 30ஆம் தேதி மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவது குறித்து துணைவேந்தர்களுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் தேசியக் கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
குறிப்பாக இந்தி திணிப்பு உள்ளிட்ட விஷயங்களை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசுடன் தமிழகத்தில் ஆளும் கட்சிகள் எதிராகவே இருந்து வந்திருக்கின்றன என்பது வரலாறு.

துணைவேந்தர் நியமனம்
இந்நிலையில் தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அது குறித்த முடிவை ஆளுநர் மாளிகை தரப்பு எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போதைய நிலையில் மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர்கள் தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பை வகித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்
அவர்களே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களையும் செய்து வருகின்றனர். இந்நிலையில்தான் அதனை மாற்றி தமிழக அரசே துணைவேந்தர்களை நியமனம் செய்ய இந்த மசோதாவை கையில் எடுத்திருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் கடந்த 17ஆம் தேதியே தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

மாநில கல்விக் கொள்கை
ஆனால் முதல்வர் டெல்லி பயணம் காரணமாக இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் வருகின்ற 30ஆம் தேதி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவது மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாகவும் தேசிய கொள்கை போல மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாகவும் முதல்வர் ஸ்டாலின் துணைவேந்தர்களுடன் ஆலோசிப்பார் என கூறப்படுகிறது.

துணைவேந்தர்களுடன் ஆலோசனை
கடந்த சில நாட்களாக வேந்தர் என்ற முறையில் பல்கலைக்கழகங்களில் நடக்கும் பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொள்ளும் ஆளுநர் ரவி மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், சனாதனம், தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசி வருகிறார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊட்டியில் தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டையும் நடத்தினார். இந்த மாநாட்டில் தேசிய கல்விக் கொள்கையை வலியுறுத்தி ஆளுநர் பேசியிருந்த நிலையில் தற்போது மாநில கல்விக் கொள்கையை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் துணைவேந்தர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications