ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18ஆம் தேதி மீனவர் சங்க மாநாடு! முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்!
சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெறும் மீனவர் சங்க மாநில மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினரால் இன்று (25.7.2023) கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கும், வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் தொடர்ந்து கடிதம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறார். இருந்த போதிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
கடந்த 20.7.2023 அன்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த இலங்கை அதிபரிடம், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாத்திடவும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது குறித்தும் இலங்கை அதிபரை வலியுறுத்திட கேட்டுக்கொண்டார்.
மேலும், வெளியுறவுத்துறை அமைச்சரை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பு கொண்டு, தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து இந்தியாவிற்கு வருகை தந்த இலங்கை அதிபரிடம் பேச வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்து மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து, தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது, தாக்கப்படுவது, அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது போன்ற நடவடிக்கைகளை கண்டித்தும், அதனை தடுத்திட கோரியும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இராமநாதபுரத்தில் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி மாநில மாநாடு நடத்தவுள்ளது.
இம்மாநில மாநாட்டில் முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களின் அழைப்பினை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆகஸ்ட் 18-ஆம் தேதி இராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளார் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications