ஞாயிற்றுக்கிழமை கூட ''நோ ரெஸ்ட்''! ஓய்வின்றி நேரடி கள ஆய்வு! ரோல் மாடலாக இறையன்பு ஐ.ஏ.எஸ்.!
சென்னை: ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வீட்டில் ஓய்வெடுக்காமல் வாரந்தோறும் நேரடி கள ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்.
இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே துறை சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூலம் பணியின் நிலையை கேட்டறிந்து கொள்ளும் அதிகாரம் இருந்தும் ஃபீல்டு விசிட் அடித்து ஆய்வு செய்கிறார் இறையன்பு.

ஞாயிற்றுக்கிழமையான இன்று இறையன்பு நடத்திய ஆய்வு விவரம் வருமாறு;
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்புகளை நேரில் ஆய்வு செய்தார்.
குறிப்பாக பெரும்பாக்கம் திட்டப்பகுதி-Vல் ரூ.31.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 256 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கட்டுமான பணிகளை விரைவில் முடித்து பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இறையன்பு ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து பெரும்பாக்கம் திட்டப்பகுதி-1 மற்றும் முன்மாதிரி திட்டப்பகுதி குடியிருப்போர் நலச் சங்கங்களின் பிரிதிநிதிகளுடன் கலந்து உரையாடினார்.

அதேபோல் பெரும்பாக்கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளை சந்தித்து பேசிய இறையன்பு, கல்வியை நாம் உயர்ந்த நோக்கத்தோடு கற்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
நாம் முன்னேறி, உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமல்ல நம்மை போல் கஷ்டபடும் மக்களையும் நாம் உயர்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு கல்வி கற்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.












Click it and Unblock the Notifications