இந்தி மொழி.. கோவாவில் தமிழ் பெண்ணிடம் கூகுள் செய்ய சொல்லி வற்புறுத்திய வீரர்.. பொங்கிய உதயநிதி
சென்னை: கோவாவில் தமிழ் பெண்ணுக்கு விமான நிலையத்தில் நடந்த சம்பவத்திற்கு உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். "இந்தி தான் தேசிய மொழி. இது கூட தெரியாதா" என கூகுள் செய்து பார்க்கச் சொல்லி வற்புறுத்தி - மிரட்டிய சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக உதயநிதி ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள பதிவில், "கோவா விமான நிலையத்தில் மவீரர்கள் இந்தியில் பேசியது புரியவில்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறிய போது, அவர் குழந்தையுடன் வந்திருக்கிறார் என்றும் பாராமல், "இந்தி தான் தேசிய மொழி. இது கூட தெரியாதா" என கூகுள் செய்து பார்க்கச் சொல்லி வற்புறுத்தி - மிரட்டிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

விமான நிலையங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை இனியும் ஏற்க முடியாது. பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படையே தவிர - இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல.
பல மொழிகள் பேசப்படும் இந்திய ஒன்றியத்தில் பிறமொழிப் பேசும் மக்கள் மீது இந்தியை தொடர்ந்து திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இத்தகைய போக்கினை ஒன்றிய அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழியுரிமையும் மனித உரிமையே என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும்." என கூறியுள்ளார்.
முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த பதிவில், "கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார். "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது? பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்." என கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட பதிவில், "கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது எனக்கூறிய தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயணி, மத்திய பாதுகாப்பு படை வீரரால் மிரட்டப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை வருவதற்காக கோவா விமான நிலையத்திற்குள் வந்த தமிழ்நாட்டு பெண் பயணியிடம், இந்தி தான் தேசிய மொழி, இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி மொழியை கற்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மிரட்டும் தொணியில் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பல்வேறு மொழிகளைப் போல இந்தியும் ஒரு அலுவல் மொழியே தவிர தேசிய மொழி கிடையாது என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் பலமுறை தெளிவுபடுத்தியிருக்கும் நிலையில் விமான நிலையங்களில் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்படும் வீரர்கள் இந்தி பேசச்சொல்லி பயணிகளை கட்டாயப்படுத்துவதாக வரும் செய்திகள் தொடர் கதையாகி வருகின்றன.
இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் என பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களையும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கியிருக்கும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை அனைவரும் மீண்டும் உணர வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே, கோவா மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் அனைத்து மொழிகளுக்கும் உண்டான மரியாதை வழங்குவதை உறுதி செய்வதோடு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் "இந்தி தேசிய மொழி, கண்டிப்பாக கற்க வேண்டும் என விமான பயணிகளை கட்டாயப்படுத்துவதா? அத்துமீறும் படையினர் மீது நடவடிக்கை வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட பதிவில், சென்னைக்கு பயணிப்பதற்காக கோவா விமான நிலையத்திற்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் இந்தி தெரியுமா? என்று கேட்டு அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர். ' நான் தமிழ்நாட்டுப் பெண். எனக்கு இந்தி தெரியாது" என்று பெண் பொறியாளர் கூறியதை மதிக்காத மத்தியப் படை வீரர்,'' தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. இந்தி தேசிய மொழி. வேண்டுமானால் கூகுள் செய்து பாருங்கள். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி கற்க வேண்டும்" என்று உரத்தக் குரலில் கூறி தமிழ் பொறியாளரை அவமதித்திருக்கிறார். மத்திய பாதுகாப்புப் படை வீரரின் செயல் கண்டிக்கத்தக்கது.
விமான நிலையங்களில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரில் பலர், தங்களின் பணி என்ன? என்பதை மறந்து விட்டு, இந்தி தேசிய மொழி, அதைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று பயணிகளை அறிவுறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் அரசியல் கட்சியினர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூட அவர்கள் பலமுறை அத்துமீறியிருக்கின்றனர். இந்தி மொழி இந்தியாவின் அலுவல் மொழி மட்டுமே, தேசிய மொழி அல்ல என்ற அடிப்படைக் கூட தெரியாத அவர்களுக்கு மக்கள் பிரதிநிதிகளிடமும், பொறியாளர்கள், மருத்துவர்கள் போன்றவர்களிடமும் இதுகுறித்து அறிவுரை கூற என்ன தகுதி இருக்கிறது?
இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்ற பொய்யை காலம் காலமாக சில மத்திய அமைச்சர்களும், மத்திய அரசு அதிகாரிகளும் மீண்டும், மீண்டும் கூறி வருவதன் காரணமாகவே உண்மை தெரியாத மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களின் பணி வரம்பு என்ன? என்பதையும், இந்தி நாட்டின் அலுவல் மொழி மட்டும் தான் என்பதையும் அவர்களுக்கு அவர்களின் உயரதிகாரிகள் புரிய வைக்க வேண்டும்.
கோவா விமான நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் அத்துமீறிய பாதுகாப்புப் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டு விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்." என்று கூறியுள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications