தவறு இண்டிகோ மீது தான்.. நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.. மத்திய அரசு உறுதி
டெல்லி: தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது என்றும், விரைவில் நிலைமை சீராகிவிடும், ஆனால் விமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார். . பயணிகள் நாளை முதல் பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள மாட்டார்கள். இண்டிகோ தனது முழுத் திறனுடன் செயல்பட இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என்றும் அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார்.
இண்டிகோ விமான நிறுவனத்தில் விமானிகள் பற்றாக்குறையால், விமான சேவை கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். தேசிய அளவில் இண்டிகோ பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. மத்திய அரசு உடனே தலையிட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு என்டிடிவி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கு போதுமான ஓய்வு கிடைப்பதை உறுதிசெய்யும் புதிய FDTL விதிமுறைகள் நவம்பர் 1 அன்று நடைமுறைக்கு வந்தது. இதில் மற்ற எந்த விமான நிறுவனங்களுக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. இது தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது.
இந்த பிரச்னை தீர்க்கப்படும் நிலையில் உள்ளது என்று என்னால் உறுதியாக கூற முடியும். பெருநகர விமான நிலையங்களில் பெரிய நெரிசல் ஏற்பட்டது... மேலும் டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெரும்பாலான பெருநகர விமான நிலையங்களில் கடந்த இரண்டு நாட்களாக இருந்த அனைத்துப் பயணிகளின் பிரச்சனையும் சரியாகும். மற்ற இடங்களிலும் இன்றிரவுக்குள் முடிந்துவிடும். இண்டிகோ மீண்டும் நாளை முதல் குறைந்த அளவு பயணிகளுடன் செயல்பாடுகளைத் தொடங்கப் போகிறது.
செயல்பாடுகள் சீரானவுடன், இண்டிகோ நிறுவனத்தினர் பயணிகளின் எண்ணிக்கையை படிபடிப்பாக அதிகரிக்கப் போகிறார்கள். எனவே பயணிகள் எந்தப் பிரச்சினையையும் சந்திக்க மாட்டார்கள்... நாளை முதல் நடப்பதைக் காண்பீர்கள். இண்டிகோ தனது முழுமையான செயல்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும்" என்றார்.
விமான போக்குவரத்து துறை அமைச்சகமோ அல்லது விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான டிஜிசிஏ-வோ (DGCA) நிலைமையை முன்கூட்டியே ஏன் கையாளவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராம்மோகன் நாயுடு, இது முற்றிலும் தவறு.. விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கு போதுமான ஓய்வு கிடைப்பதை உறுதிசெய்யும் புதிய FDTL விதிமுறைகள் நவம்பர் 1 அன்று நடைமுறைக்கு வந்த பின்னர், அமைச்சகமும் ஒழுங்குமுறை அமைப்பும் விமான நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது..
நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விமான நிறுவனங்களுடன் விவாதித்து வருகிறோம். இதுபோன்ற நிலைமை ஏற்பட்டால் எங்களுக்குத் தெரிவிக்க பல வாய்ப்புகளை வழங்கினோம். எனவே, இந்த (இண்டிகோ குழப்பத்தை) விசாரிக்கவும், தவறு செய்தவர்களைக் கண்டறியவும் இன்று நாங்கள் ஒரு குழுவை அமைத்திருக்கிறோம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம். FDTL வழிகாட்டுதல்களே இந்த பிரச்சனைக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது, ஆனால் மற்ற விமான நிறுவனங்களும் (விதிமுறைகளைப்) பின்பற்ற வேண்டியிருந்தது, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனவே இது இண்டிகோவில் மட்டும் தான் பிரச்சனை. இண்டிகோ மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும், அது அபராதமாக இருக்கலாம். இது தவிர்க்க முடியாதது. ஏனெனில், அமைச்சகத்தின் முக்கியக் குறிக்கோள் பயணிகளின் நலன் தான்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications