விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக
சென்னை: காவல்துறையினருக்கான முதல்வர் பதக்க விழாவில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஒரு நிர்வாக தவறு தற்போது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னையில் நடைபெற்ற முதல்வர் பதக்க வழங்கும் நிகழ்ச்சியில் காவலர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயரும் கையெழுத்தும் இடம்பெற்றிருந்தது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் விளக்கம் அளித்தாலும், தவெக தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் சிறப்பாக பணியாற்றிய 300 காவல்துறையினருக்கு முதல்வர் பதக்கம் வழங்கும் விழா நடைபெற்றது. காவல்துறையில் சிறந்த சேவையை பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது, காவலர்களுக்கு மிக முக்கியமான அங்கீகாரமாக கருதப்படுகிறது.
வழக்கமாக பதக்கத்துடன் முதல்வரின் கையெழுத்துடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். அந்த வகையில் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் காவல்துறை சார்பில் செய்யப்பட்டிருந்தன.

காவலர் விருது
பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட தயாராக இருந்த நிலையில், சான்றிதழ்களை ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வழங்கப்பட இருந்த சான்றிதழ்களில் தற்போதைய முதல்வரின் பெயர் இடம்பெற வேண்டிய இடத்தில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயரும் அவரது கையெழுத்தும் அச்சிடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த தகவல் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தபோதே அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் விஜய்
நிலைமையை சமாளிக்க உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், சான்றிதழ்களை நேரடியாக வழங்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து நிகழ்ச்சியில் காவலர்களுக்கு பதக்கங்கள் மட்டும் வழங்கப்பட்டன. பின்னர் சான்றிதழ்கள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. பின்னர் முதல்வர் விஜய் விஜய் கைழுத்திடப்பட்ட சான்றிதழ்கள் வந்த பிறகு சம்பந்தப்பட்ட காவலர்களிடம் தனியாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழக காவல்துறை
இந்த விவகாரம் குறித்து காவல்துறை உயரதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, தேர்தலுக்கு முன்பாகவே இந்த சான்றிதழ்கள் அச்சடிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து புதிய வடிவில் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் பழைய கையிருப்பில் இருந்த சான்றிதழ்கள் தவறுதலாக பயன்படுத்தப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், தற்போதைய முதல்வரின் பெயர் மற்றும் கையெழுத்துடன் புதிய சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டிய நிலையில், அலுவலக அளவிலான கவனக்குறைவு காரணமாக இந்த தவறு நிகழ்ந்துள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு நிகழ்ச்சி
இது முற்றிலும் நிர்வாக பிழை மட்டுமே என்றும், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அரசு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் ஆவணங்கள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக உயர்மட்ட அரசு விழாக்களில் இத்தகைய தவறுகள் நிகழ்வது நிர்வாக செயல்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்புவதாகவும் சிலர் விமர்சித்துள்ளனர்.
முதல்வர் பதக்கம்
இதற்கிடையில், இன்னும் சில நாட்களில் மேலும் 330 காவல்துறையினருக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது வழங்கப்பட உள்ள அனைத்து சான்றிதழ்களும் மீண்டும் முழுமையாக சரிபார்க்கப்படும் என்றும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் சிறந்த சேவையை கௌரவிக்கும் முக்கிய நிகழ்ச்சியில் ஏற்பட்ட இந்த சிறிய நிர்வாக தவறு, தற்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications