எங்களுக்கு காழ்ப்புணர்ச்சி இருந்தால் அம்மா உணவகம் இருக்குமா?-ஆதங்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை என்பதற்கு அம்மா உணவகம் ஒரு சாட்சி என்று முதல்வர் முக ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் அமையும் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சட்டசபையில் அறிவித்தார்.
இதையடுத்து இந்த அறிவிப்பை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

காழ்ப்புணர்ச்சி இல்லை
முன்னதாக, அதிமுக தரப்பு, அரசு முடிவை எதிர்த்தபோது, எழுந்த முதல்வர் ஸ்டாலின், இதற்கு விளக்கம் அளித்தார். பெயரை நீக்குவதற்கு திட்டமிட்டு செயல்பட்டு உள்ளீர்கள் என்று பொருள்படும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர் பேசினார். அப்படி காழ்ப்புணர்ச்சி இந்த அரசுக்கு இருந்திருந்தால் அம்மா உணவகம் இன்று இல்லாத சூழ்நிலையாக்கி இருப்போம். எந்த காழ்ப்புணர்ச்சியும் இந்த அரசுக்கு கிடையாது. ஏன் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகம் நீக்கப்பட்டது என்ற விவரத்தை சம்பந்தப்பட்ட அமைச்சர் தெரிவித்திருக்கிறார். எனவே தயவுசெய்து காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொண்டோம் என்பதை நீங்கள் மறந்து விடுங்கள். அப்படி எதுவும் இல்லை.. இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு முதல்வர் பதிலளித்தார்.

அதிமுக வெளிநடப்பு
இருப்பினும் முதல்வர் பதிலில் திருப்தியடையாத அதிமுக உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடிபழனிசாமி கூறுகையில், இன்று கல்வித்துறை மானிய கோரிக்கை மீது அதிமுக உறுப்பினர் அன்பழகன் உரையாற்றினார். அப்போது ஜெயலலிதா பெயரில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
பள்ளி, கல்லூரி மற்றும் உயர் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தார் ஜெயலலிதா. தமிழக ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக, நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக, உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக மாற்றி கல்வித்தரத்தை உயர்த்தினார். இத்தனைக்கும் காரணமாக இருந்த ஜெயலலிதா பெயரில் அவருக்கு புகழ் சேர்க்கும் விதமாக விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் புதிதாக பல்கலைக்கழகம் ஆரம்பித்தோம் . ஆளுநர் இதற்கு அனுமதி வழங்கியிருந்தார். துணைவேந்தர் பணி நியமனம் செய்யப்பட்டது.

ஜெயலலிதா பல்கலைக்கழகம்
இந்தநிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அந்தப் பணிகளை முழுமையாக செய்து முடிக்கப்படவில்லை. இப்போது புதிதாக வந்துள்ள அரசு ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க கூடாது என்று தெரிவித்துவிட்டனர். மாறாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் அந்த பல்கலைக்கழகம் இணைக்கப்படும் என்று அறிவித்துவிட்டார்கள். இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

அம்மா உணவகம்
காழ்ப்புணர்ச்சி இருந்தால் அம்மா உணவகத்தை மூடி இருப்போமே என்று ஸ்டாலின் பேசியுள்ளாரே என்ற நிருபர்கள் கேள்விக்கு, அம்மா உணவகம் எதற்காக தொடங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஏழை எளியவர்கள் அடித்தட்டு மக்கள் பயன் பெறுவதற்காக தாயுள்ளத்தோடு தொடங்கப்பட்டது. அதை மூடுவதாக ஸ்டாலின் கூறியுள்ளது ஏழை மக்களுக்கு எதிரானது என்பதாகதான் தெரிகிறது என்று எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications