Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.. அன்றே சொன்ன அண்ணா! மீண்டும் அழுத்திச் சொன்ன ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கை திட்டம்தான் இந்தியாவின் பன்முகத் தன்மையையும், இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் மேலும் வலிமைப்படுத்தும் எனவும், இந்திய ஒருமைப்பாட்டில் உண்மையான அக்கறை கொண்ட எல்லோரும் மாநில சுயாட்சிக் கொள்கைக்கு குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மத்திய-மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இதனை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசினார்.

நிக்ழ்ச்சியில் பேசிய அவர்," எல்லோரும் சமம் என்ற சமத்துவ எண்ணத்தின் அடிப்படையில், எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் - அனைவரும் அனைத்து உரிமைகளும் பெறவேண்டும் - எல்லோரும் அரசுப் பணிகளில் இணையாக பணியாற்ற வேண்டும் என்பதுதான் சமூகநீதிக் கோட்பாட்டுக்கு அடிப்படை!

mk stalin dmk Dravidian model

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியுடன் பயன்கள், சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சென்றடைந்திருக்கிறது. ஐ.நா. மன்றத்தின் மானுட மேம்பாட்டுக் குறியீடுகளான தனிநபர் வருமானம், கல்வி, பொது சுகாதாரம், பெண்ணுரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற குறியீடுகளில் இந்திய மாநிலங்களுடன் ஒப்பிட்டால், தமிழ்நாடு பல துறைகளில் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. ஒன்றிய அரசு விதிக்கின்ற நேர்முக வரிகளிலும், ஜி.எஸ்.டி. வரிகளிலும் ஒன்றிய அரசுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருகின்ற மாநிலமாகவும் தமிழ்நாடு இருக்கிறது.

நிதிப் பகிர்வு

ஆனால், தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு தருகின்ற நிதிப் பகிர்வுத் தொகையில், மாநிலம் அளிக்கின்ற வரி வருமானத்துக்கு ஏற்ப, ஒன்றிய அரசு தமிழ்நாட்டு அரசுக்கு உரிய நிதிப் பங்கை வழங்காமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில் சிறந்த பல சமூகப் பொருளாதார திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி, கடந்த நான்கரை ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு நாம் வழங்கி வருகிறோம். பல்வேறு நெருக்கடிகளையும் மீறி, போராடி தமிழ்நாட்டை உயர்த்தி வருகிறோம்.

பேரறிஞர் அண்ணா

1967-ல் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும் தன்னுடைய சட்டமன்ற உரையில், "மாநிலங்கள் உரிமை பெற அரசமைப்புச் சட்டத்தில் மறு ஆய்வு தேவையானது" என்று குறிப்பிட்டார். 1969-ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நீதியரசர் ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். ஒன்றிய - மாநில உறவுகளைச் சீராய்வு செய்து 1971, மே 27-ல் ராஜமன்னார் குழு தனது வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் அளித்தது. அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, 1974 ஏப்ரல் 14-ஆம் நாள் மாநில சுயாட்சி தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள்.

ராஜமன்னார் அறிக்கை

அப்போதைய பிரதமர் திருமிகு. இந்திரா காந்தி அவர்களுக்கு, ஒரு மடல் எழுதி, மாநில சுயாட்சி தீர்மானத்தையும் இணைத்து, ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். இன்றைக்கும் ராஜமன்னார் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு பரிந்துரைகள் மிகவும் போற்றத்தக்கதாகவும், நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையிலும் இருக்கிறது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக அல்லாத கட்சிகளின் தலைமையில், ஆட்சி நடைபெறுகிறது.


திராவிட முன்னேற்றக் கழகம்

இந்தப் பட்டியலில் காஷ்மீரும் ஒரு மாநிலமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு அரசமைப்புச் சட்ட விதிகளை மீறி, தன்னிச்சையாக, காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு, ஆளுநர் ஆட்சிக்காலத்தில் காஷ்மீர் மாநிலத்தை ஒன்றிய அரசின் நேரடியான ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியாக மாற்றி அறிவித்தார்கள். இத்தகைய ஜனநாயக விரோத, கூட்டாட்சியியலுக்கு எதிரான நடவடிக்கைளை திராவிட முன்னேற்றக் கழகமும், எங்களோடு இணைந்திருக்கின்ற காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முசுலீம் லீக் என்று அனைத்து கட்சிகளும் இணைந்து கண்டித்தோம்.

ஒன்றிய அரசு

இது போன்ற நிலை தொடரக்கூடாது; மாநிலங்களுடைய உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படக்கூடாது என்ற உணர்வில்தான், மீண்டும், கடந்த 50 ஆண்டுகளில் கூட்டாட்சிக்கு எதிராக நடைபெற்ற நிகழ்வுகளை ஆய்ந்து, உரிய அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் மாண்புமிகு குரியன் ஜோசப் தலைமையில் ஒரு உயர்நிலைக் குழுவை நியமித்திருக்கிறோம். 1983-ல் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்கள் மாநாட்டை தொடர்ந்து, அன்றைய ஒன்றிய அரசு, உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர் சர்க்காரியா தலைமையில் 1983-ல் ஒரு குழு அமைத்தது.

நிதி ஆணையங்கள்

நிதி ஆணையங்கள் சுதந்திரமாக செயல்படுவதையும் ஒன்றிய அரசு தடுக்கின்றது. மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய உரிய, நியாயமான நிதி பங்கீட்டை மறுக்கின்றது. இதையெல்லாம் மீறி, கடந்த 4 ஆண்டுகளாக திராவிட மாடல் அரசு, பல சிறந்த திட்டங்களை வகுத்து, நிறைவேற்றி வருகிறது. நிதிப்பற்றாக்குறை காலத்தில்கூட சிறந்த முறையில் நிதி மேலாண்மை செய்து 2024-25-ஆம் ஆண்டில், 11.19 விழுக்காடு எனும் இரட்டை இலக்க வளர்ச்சியை 14 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் அடைந்திருக்கிறோம்!

இந்தி மொழி திணிப்பு

நடுநிலை தவறாத நல்லெண்ணம் கொண்ட பல அறிஞர்களும், பொதுநல நோக்கர்களும், திராவிட மாடல் அரசின் சமூக நீதித் திட்டங்களை பாராட்டி வரவேற்கிறார்கள். இந்தி மொழியை திணிப்பதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனாலும், பல்வேறு மொழிப் போராட்டக் களங்களை எதிர்கொண்டு, இந்தித் திணிப்பை தமிழ்நாடு முறியடித்திருக்கிறது. ஏராளமான அரசியல் தலைவர்கள், தமிழ் உணர்வாளர்கள் - மாணவர்கள் போராடி, கட்டாய இந்தியை தடுத்தார்கள்! அதனால்தான், 1968-லேயே இருமொழிக் கொள்கையை முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத் தீர்மானமாகவே நிறைவேற்றினார்.

பாஜக

தமிழ்நாட்டில் இருந்து எழுப்பப்படுகின்ற இந்தி ஆதிக்க எதிர்ப்பு, மாநில உரிமை முழக்கத்தை இப்போது இந்தியாவின் பல மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். கர்நாடகா, மேற்கு வங்க மாநிலங்களில் இரு மொழிக் கொள்கையை ஆதரித்து, குரல்கள் எழுப்புகிறார்கள். 2025-ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இணைந்து இந்தி எதிர்ப்புப் பேரணியை நடத்தியதும், பாஜக, ஏக்னாத் ஷிண்டே கூட்டணி ஆட்சியின் பாஜக முதலமைச்சர் பட்நாவிஸ் அவர்கள் மராட்டிய மாநிலத்தில் இந்தி கட்டாயம் கிடையாது என்று அறிவித்தார்.

மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி

மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கை திட்டம்தான் இந்தியாவின் பன்முகத் தன்மையையும், இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் மேலும் வலிமைப்படுத்தும்! அதற்கு, நம்முடைய உயர்நிலைக்குழு சிறந்த முறையில் பணியாற்றி வருகிறது. தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் முயற்சியால்தான் ஒன்றுபட்ட இந்தியா வலிமை பெறும். பலவீனமான மாநிலங்களால் இந்தியாவை உயர்த்த முடியாது. எனவே, இந்திய ஒருமைப்பாட்டில் உண்மையான அக்கறை கொண்ட எல்லோரும் மாநில சுயாட்சிக் கொள்கைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

தமிழ்நாடு அரசு அமைத்த குழு போல இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களும் இதுபோல குழு அமைத்து, மாநில உரிமை முழக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் வலியுறுத்துகிறேன். "மாநில சுயாட்சி - ஒன்றியத்தில் கூட்டாட்சி" எனும் விழுமியங்கள் கொண்டதாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தம் பெற நாம் அனைத்து வகையிலும் முயற்சி செய்வோம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+