முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.. எங்கெல்லாம் செல்கிறார்? பெரிய பிளான்
சென்னை: தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா செல்வதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்திருக்கிறார்.. இதற்காகவே பல்வேறு புதிய தொழில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன், தொழிலை எளிமையாக்கும் விதமாக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு, அதற்கான கொள்கைகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதேபோல, சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு, அதன்மூலம் ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
வெளிநாட்டு பயணம்: அதேபோல, தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அந்த பயணங்களின்போது, துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உட்பட பல்வேறு நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.. இதையடுத்து, திமுகவின் இந்த 3 ஆண்டு காலத்தில், 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக ரூ.9.94 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கின்றன.
முதலீடுகள்: இதன் தொடர்ச்சியாக, தமிழகத்துக்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, முதல்வர் ஸ்டாலின் இன்று அமெரிக்க பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையிலிருந்து அமெரிக்கா புறப்பட்டார். அதிகாரிகள் குழுவும் ஸ்டாலினுடன் இன்று அமெரிக்கா செல்கிறது. இந்த பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும், பல ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை சான்பிரான்சிஸ்கோ செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதுடன், தொழில் தொடங்க தமிழகம் வருமாறு முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுக்க உள்ளார்.. அப்போது முக்கிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. வருகிற 31-ம் தேதி, புலம்பெயர்ந்த தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார்.
முக்கிய நிகழ்வுகள்: செப்டம்பர் 2ம் தேதி சிகாகோ செல்லும் முதல்வர் ஸ்டாலின், 12-ம் தேதி வரை தங்கியிருக்கிறார்.. "ஃபார்ச்சூன் 500" பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார்... அதேபோல, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளார். செப்டம்பர் 7-ம் தேதி அயலக தமிழர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ள தொழில் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.. அமெரிக்காவில் 17 நாட்கள் தங்கி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 12-ம் தேதி சென்னை திரும்புவார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இன்று இரவு வெளிநாடு செல்லும் முதல்வர் ஸ்டாலினை விமான நிலையத்தில் அமைச்சர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள் வழியனுப்ப உள்ளனர்.
வாழ்த்துக்கள்: அமெரிக்கா செல்லும் முன்பு, பத்திரிகையாளர்களை சந்தித்து, பயண விபரத்தை முதல்வர் வெளியிடுவார் என, அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.. முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை முன்னிட்டு ஏற்கெனவே நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications