சபாநாயகம் வீட்டுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின்.. கூட யாரெல்லாம் போயிருக்காங்கனு பாருங்க..!
சென்னை: அண்மையில் மறைந்த முன்னாள் தலைமைச் செயலர் சபாநாயகம் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 101. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின்போது, 1971 ஏப்ரல் முதல் 1976 மார்ச் வரை தலைமை செயலராக சபாநாயகம் பொறுப்பு வகித்தார்.
முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, காமராஜர், கருணாநிதி உள்ளிட்ட முதலமைச்சர்களுடன் பணியாற்றிய சபாநாயகம், இந்திய ஆட்சிப்பணிக்கு வருவதற்கு முன்பாக இராணுவத்திலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சபாநாயகம் சென்னை ஆர்.ஏ.புரம் பிஷப் கார்டனில் வசித்து வந்த நிலையில் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். முன்னாள் தலைமைச் செயலர் சபாநாயகம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரை கௌரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவித்தார்.
மறைந்த முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் 30 குண்டுகள் முழங்க காவல்துறையினர் இறுதி மரியாதை அளித்தனர். காவல்துறை மரியாதைக்கு பிறகு, பெசன்ட்நகர் மின்மயானத்தில் சபாநாயகம் உடல் தகனம் செய்யப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்காக பீகார் மாநிலம் பாட்னாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், இன்று சபாநாயகம் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், சபாநாயகத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
முதல்வர் ஸ்டாலினுடன், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திமுக எம்.பி ஆ.ராசா, திமுக எம்.எல்.ஏ மயிலை வேலு, முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.












Click it and Unblock the Notifications