ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரம்.. 2 நாள் பயணமாக திருவாரூர் வந்தார் முதல்வர் ஸ்டாலின்..இதுதான் ஷெட்யூல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய திருவாரூர் வந்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக திருவாரூருக்கு வருகை தந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. அதிமுக சார்பில் கேஎஸ் தென்னரசுவும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திருமாவளவன், வைகோ, கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். அது போல் திமுக அமைச்சர்கள் அங்கே முகாமிட்டு தினந்தோறும் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின்
அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் உதயநிதியும் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி உதயநிதி நேற்றைய தினம் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் ஒற்றை செங்கலுடன் வந்து பிரச்சாரத்தை கலகலப்பாக்கினார். மேலும் முதல்வர் ஸ்டாலினை மீசை வைத்த ஆம்பளையா என எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்கு பதிலடியாக 2 பெண்களின் கால்களுக்கும் மீசையில் பாலிஷ் போட்டவர்தான் எடப்பாடி என கடுமையாக விமர்சித்திருந்தார்.

சென்னையிலிருந்து விமானம்
இந்த நிலையில் வரும் 24 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்யவுள்ளார். அவர் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு காலை 11.15 மணிக்கு வந்தார். அங்கு திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சாலை மார்க்கமாக திருவாரூருக்கு வந்தார்.

சிறப்பு வரவேற்பு
முன்னதாக மாவட்ட எல்லையான கோவில் வெண்ணியில் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்டு இரவு திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள வீட்டில் தங்குகிறார். நாளை 22-ம் தேதி திருவாரூரில் இருந்து கார் மூலம் மன்னார்குடிக்குச் சென்று மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு இல்ல திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

திருவாரூர்
தொடர்ந்து அவர் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகம், மணிமண்டபம் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு அவர் மீண்டும் சாலை மார்க்கமாக திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை செல்கிறார். திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு ஐ.ஜி. கார்த்திகேயன் மேற்பார்வையில் டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications