ரெய்டு மூலம் நம்மை மிரட்ட நினைத்தவர்கள் மிரண்டு போயிருக்கின்றனர்.. CPI மாநாட்டில் முதல்வர் பேச்சு!
சென்னை: ரெய்டு மூலம் நம்மை மிரட்ட நினைத்தவர்கள் தற்போது மிரண்டு போயிருக்கின்றனர் என சேலத்தில் நடைபெற்ற சிபிஐ மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
சேலத்தில் இன்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசி உள்ளார்.

அப்போது அவர் பேசுகையில், "தேர்தல் ஆணையத்தைக் கீ கொடுத்தால் ஆடும் பொம்மை ஆக்கிவிட்டார்கள். தேர்தல் ஆணையர் நியமனத்தில்தான் சதி என்றால், வாக்காளர் பட்டியலிலும் சதி நடக்கிறது. ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில் தரவில்லை. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று எச்சரித்தோமோ, அதெல்லாம் நடக்கிறது.
அமலாக்கத் துறையை வைத்து ஒத்துவராத எதிர்க்கட்சிகளை மிரட்டுவார்கள் என்றோம். அது நடக்கிறது. உறவினர் வீட்டில் ரெய்டு நடத்தினால் ஓடி வந்து ஒட்டிக்கொள்ள நாம் என்ன எடப்பாடி பழனிசாமியா? தமிழ்நாடு மக்கள் அரசியல் தெளிவு, அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள்.
தமிழ்நாட்டுக்காக உண்மையாக உழைத்தவர்கள் யார் என்று மக்களுக்குத் தெரியும். 2026 தேர்தலில் இந்தக் கூட்டணிதான் வெற்றி பெறும். திராவிட மாடல் 2.0 சிறப்பாக இருக்கும். ஜனநாயகம் வெல்ல களம் நிற்கும் அத்தனை தோழர்களுக்கும் எனது ரெட் சல்யூட்.
கொள்கை முரணில் ஒரு போதும் எதிரிகளுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. திராவிட இயக்கத்துக்கும் பொதுவுடமை இயக்கத்துக்கும் இடையே உள்ளது கொள்கை நட்பு. ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள் நமது கூட்டணியைப் பிளவுபடுத்தப் பார்க்கிறார்கள். கூட்டணியில் இருந்தாலும், நியாயமான விமர்சனங்களை முன்வைக்க கம்யூனிஸ்ட் தயங்குவதில்லை.
சமூகத்திற்கு தேவையான நமது கொள்கை வலுவாக இருப்பதால் தான் நமது நட்பும் வலுவாக இருக்கிறது. சேலத்தில் தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும். அதன் பணிகள் நாளையே தொடங்கப்படும். முத்தரசன் வைத்த கோரிக்கையை தட்டிக்கழிக்க முடியுமா?!
நாடு கடுமையான சூழலை எதிர்கொண்டு வரும் தருணத்தில் நாம் கொள்கை உறவோடு சேர்ந்திருக்கிறோம். சதி செய்தாலும் போலி செய்திகளை பரப்பினாலும் நாம் ஒற்றுமையாய் இருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கம்யூனிஸ்டுகள் மீது திடீர் பாசம் வந்துள்ளது.
கம்யூனிஸ்டுகளை விட நீங்கள் பெரிய தியாகம் செய்து விட்டீர்களா, எழுச்சித்தமிழர் திருமாவை விட நீங்கள் பெரிய தியாகம் செய்துவிட்டீர்களா இபிஎஸ்? அடிமைத்தனத்தை பற்றி எடப்பாடி பேசலாமா? அவருக்கு பேச என்ன உரிமை உள்ளது. திராவிட, கம்யூனிஸ்ட் கொள்கைகளை பற்றி தெரியாத எடப்பாடி பழனிசாமி வாய்க்கு வந்ததைப் பேசி வருகிறார். ரெய்டு மூலம் நம்மை மிரட்ட நினைத்தவர்கள் தற்போது மிரண்டு போயிருக்கின்றனர்.
எப்படியாவது கூட்டணியை கலைத்துவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் நமது லட்சியம் பெரிது. அதற்காகத்தான் நாம் அனைவரும் ஒன்றாகி இருக்கிறோம். கூட்டணியில் இருந்தாலும் விமர்சனங்களை முன்வைக்க கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் தவறியதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications