"டெல்லியிலே ஒலிக்கக் கூடிய கர்ஜனை மொழி கனிமொழி".. புதிய அடைமொழியுடன் அழைத்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: டெல்லியிலே ஒலிக்கும் கர்ஜனை மொழி கனிமொழி திமுகவின் புதிய துணை பொதுச் செயலாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்படுகிறார் என திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அடைமொழியுடன் அறிவித்தார்.
கனிமொழிக்கு மட்டுமல்ல, திமுகவின் துணை பொதுச் செயலாளர்களாக மீண்டும் தேர்வான ஐ பெரியசாமி, பொன்முடி, ஆ ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரையும் அடைமொழியை வைத்தே அழைத்தார்.
திமுக பொதுக் குழு கூட்டத்தில் 2ஆவது முறை தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து, மற்ற பதவிகளுக்கு தேர்வானவர்களையும் அறிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின்
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், தலைமை நிலைய முதன்மை செயலாளராக நேருவுக்கு நிகர் நேரு என போற்றப்படும் நேரு நியமிக்கப்படுகிறார். திண்டுக்கல்லின் தீரர் கழகத்தினுடைய வீரர், ஐ பெரியசாமி துணை பொதுச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.

அறிவுமுடி
தலைவர் கலைஞர் அவர்களால் அறிவுமுடி என போற்றப்பட்ட முனைவர் பொன்முடி துணை பொதுச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
தலைவர் கலைஞர் அவர்களால் தகத்தகாய சூரியன் என அழைக்கப்பட்ட ஆ ராசா துணை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அந்தியூர் செல்வராஜ்
அடித்தட்டு மக்களுக்காக அயராது உழைக்கும் அந்தியூர் செல்வராஜ் துணை பொதுச் செயலாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். டெல்லியிலே ஒலிக்கக் கூடிய கர்ஜனை மொழி கனிமொழி புதிதாக துணை பொதுச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார் என அறிவித்தார்.

மேடைக்கு அழைத்த முதல்வர் ஸ்டாலின்
கனிமொழியை மேடைக்கு வருமாறு அழைத்ததும் கீழே இருந்தவர்களுக்கு கை கொடுத்த கனிமொழி மேலே வந்த போது அவருக்கு கைகுலுக்கி வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின். பிறகு பெரியார், அண்ணா, கருணாநிதி, க அன்பழகன் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு கனிமொழி மாலை அணிவித்தார்.

மாலை அணிவித்த நிர்வாகிகள்
பின்னர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட துணை பொதுச் செயலாளர் கனிமொழி பொன்னாடையை வழங்கினார். இதையடுத்து மேடையில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக துணை பொதுச் செயலாளர்களான ஐ பெரியசாமி, பொன்முடி, ஆ ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி ஆகியோருக்கு மாலை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். டெல்லியில் ஒலிக்கக் கூடிய கர்ஜனை மொழி என அழைப்பதற்கேற்ப நாடாளுமன்றத்தில் கனிமொழி மத்திய அரசிடம் கேள்விக்கனைகளை தொடுத்து வருகிறார். முக்கியமாக தமிழ் மொழிக்காகவும் தமிழக மக்களுக்காகவும் அவர் கர்ஜித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications