நான் சாதாரண ஸ்டாலின் அல்ல! என்னிடத்தில் சொன்னால் அது நடக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டு!
சென்னை: நியாயமான கோரிக்கையாக இருந்தால் அதனை ஸ்டாலின் உடனே நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கை இன்று அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற பொன்.குமார் திருமண விழாவில் பேசிய அவர், தாம் சாதாரண ஸ்டாலின் அல்ல என்பதையு குறிப்பிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் உரை தொகுப்பு பின்வருமாறு;

சீர்திருத்த திருமணம்
சீர்திருத்தத் திருமணங்கள் - சுயமரியாதைத் திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெறும் என்று சொன்னால் அது சட்டப்படி செல்லுபடி ஆகாது என்ற நிலையில் நடைபெற்றிருக்கிறது. ஆனால் 1967-ஆம் ஆண்டு தமிழக முதல்வராக அண்ணா பொறுப்பேற்ற பிறகு அவரால் கொண்டுவரப்பட்ட பல்வேறு தீர்மானங்களில் ஒரு தீர்மானம்தான் சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடி ஆகும் என்ற அந்தத் தீர்மானம்.

திருமண விழா
இது திருமண விழா, இருந்தாலும் பேசிய பலர், பல கோரிக்கைகளை எடுத்துவைத்து, இதற்கு முதலமைச்சர் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும், அவர் மூலமாக அது நிறைவேற்றப்படும் வேண்டும் என்ற அந்த நம்பிக்கையோடு அந்த கோரிக்கைகளை எடுத்து வைத்திருக்கிறார்கள். இதை நான் சொல்வதற்குக் காரணம், இவனிடத்தில் சொன்னால் அது நியாயமாக இருந்தால் நிச்சயமாக நிறைவேற்றுவான் என்று அந்த நம்பிக்கை இன்றைக்கு உங்களுக்கு மட்டுமல்ல - தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அந்த உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

தொடர் வெற்றி
அதனால்தான் நாம் நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் - அதைத் தொடர்ந்து நடைபெற்றிருக்கும் சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்கிற இந்த அமைப்பிற்கு மக்கள் ஆதரவு தந்து நம்மைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு நடைபெற்றிருக்கும் உள்ளாட்சி அமைப்பின் தேர்தல் - நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறோம் என்று சொன்னால் மக்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு.

பொன்.குமார்
பொன்.குமாருக்கு சென்றமுறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக நிற்க வேண்டும் என்று என்னிடத்தில் எடுத்துக் கேட்டபோது, நான் சொன்னேன், "இவ்வளவு கட்சிகள் இருக்கிறது - இவர்களுக்கெல்லாம் இடம் கொடுக்க வேண்டியிருக்கிறது, இந்த முறை எவ்வாறு தலைவர் கலைஞர் இருந்து இடம் ஒதுக்கித் தந்தாரோ, அதுபோல் வாய்ப்பு இருக்காது என்று நான் கருதுகிறேன். அதற்காக தயவுசெய்து வருத்தப்படாதீர்கள். நிச்சயம் உங்களுக்குரிய மரியாதையை - உங்களுடைய உணர்வுகளை - உங்களுடைய எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் நீங்கள் இருந்து பணியாற்றும் சூழலை நிச்சயம் நான் உருவாக்கித் தருவேன்" என்று நான் சொன்னேன்.

வாரியத் தலைவர்
அதனால்தான் ஆட்சிக்கு வந்தவுடன் முதன்முதலாக ஒரு வாரியத்திற்குத் தலைவராக நியமித்தது யார் என்று கேட்டால் நம்முடைய பொன்குமார் அவர்கள்தான் நியமிக்கப்பட்டார். அவர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இப்போது அல்ல, கலைஞருடைய ஆட்சிக் காலத்தில் கூட அவர் அந்தப் பொறுப்பை ஏற்று பணியாற்றியிருக்கிறார். அப்போது நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக - துணை முதலமைச்சராக இருந்தபோது பல முறை என்னை அவர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருக்கும் பல நிகழ்ச்சிகளில் என்னைப் பங்கேற்க வைத்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எனவே, இதைப் பொன்குமார் அவர்கள் இல்லத்தில் நடைபெறும் திருமணமாக மட்டும் நான் கருதவில்லை. ஒட்டுமொத்த தொழிலாளர்களின் இல்லத்தில் நடைபெறும் திருமணமாகத்தான் நான் கருதுகிறேன். அந்த உணர்வோடுதான் நானும் கலந்து கொண்டிருக்கிறேன்.ம்நான் அண்மையில் துபாய்க்கு சென்றிருந்த நேரத்தில், ஏதோ பல கோடி ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றதாக முன்னாள் முதலமைச்சர் - இன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேசிய செய்திகளையெல்லாம் நாம் பார்த்தோம். அதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கே எனக்கு முன்னால் பேசியவர்களே அதற்குரிய விளக்கத்தைத் தந்திருக்கிறார்கள்.

டெல்லி பயணம்
அதையடுத்து அண்மையில் மூன்று நாட்கள் இந்தியாவின் தலைநகரமான டெல்லிக்குப் பயணம் சென்று, நம்முடைய மாநிலத்தின் பிரச்சினைகளை எல்லாம் பிரதமர் இடத்தில் - அதற்குரிய அமைச்சர்களிடத்தில் அந்தக் கோரிக்கைகளை எல்லாம் எடுத்துவைத்து உரிமைக்குக் குரல் கொடுத்து வந்திருக்கிறோம். அதையெல்லாம் மூடி மறைக்க - அதைத் தாங்கிக்கொள்ள முடியாத சிலர் என்ன சொன்னார்கள் என்றால், ஏதோ அச்சத்தின் காரணமாக - பயத்தின் காரணமாக சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிற என்னை அதிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போனேன் என்று சொல்கிறார்கள். ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன். அங்கு சென்று யாருடைய காலிலும் விழுந்து, இதை எனக்கு செய்து தாருங்கள் என்று கேட்கவில்லை.

சாதாரண ஸ்டாலின் அல்ல
தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் நான் போனேனே தவிர, வேறு அல்ல. ஏனென்றால் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல - பதவியேற்றபோதே நான் சொன்னேன் 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' என்றுதான் சொல்லியிருக்கிறேன். நான் கலைஞருடைய மகன். என்றைக்கும் தமிழ்நாட்டுக்காக உழைப்பேன். அவ்வாறு உழைக்கின்ற அந்த உழைப்பிற்கு பொன்குமாரும் எனக்குத் துணை நிற்பார் என்று சொல்லி விடைபெறுகிறேன்.












Click it and Unblock the Notifications