எழுத்தாளர்களை கொண்டாடும் திமுக அரசு! 6 பேருக்கு வீட்டு வசதி வாரியத்தில் இலவச குடியிருப்பு ஒதுக்கீடு!
சென்னை: எழுத்தாளர்களை கவுரவித்து அவர்களை சிறப்பிக்கும் வகையில் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 6 எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் இலவச குடியிருப்புகளை ஒதுக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
எழுத்தாளர் இமயம் உட்பட 6 பேருக்கும் தலைமைச் செயலகத்தில் வைத்து குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
இது தொடர்பான மேலும் விவரம் வருமாறு;

கனவு இல்லம்
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு கனவு இல்லத் திட்டத்தின் கீழ், எழுத்தாளர்கள் செகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன், கவிஞர் புவியரசு என்கிற சு. ஜகன்னாதன், சுந்தரமூர்த்தி, பூமணி என்கிற பூ.மாணிக்கவாசகம், மோகனராசு, இமையம் என்கிற அண்ணாமலை ஆகிய ஆறு பேருக்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.

கடந்தாண்டு அறிவிப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்று கனவு இல்லத் திட்டத்தை முதல்வர் கடந்தாண்டு அறிவித்தார்.

ஈரோடு தமிழன்பன்
அந்த அறிவிப்பிற்கிணங்க, கருணாநிதியின் பிறந்தநாளான இன்று கனவு இல்லத் திட்டத்தின் கீழ், 6 எழுத்தாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கித் தரப்பட்டுள்ளன. செகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பனுக்கு சென்னை, திருமங்கலம், தெற்காசிய விளையாட்டு கூட்டமைப்பு கிராமக் கோட்டம், 304 உயர் வருவாய்ப் பிரிவு முதல் தளம் அடுக்குமாடி குடியிருப்பு எண்.சி2/235 இல் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் வீடு
2009-ஆம் ஆண்டில் "கையொப்பம்" எனும் கவிதை நூலிற்காக சாகத்திய அகாதமி விருது பெற்ற கவிஞர் புவியரசு என்கிற சு. ஜகன்னாதனுக்கு கோவை வீட்டுவசதி பிரிவு - கணபதி திட்டப்பகுதி 48, உயர் வருவாய்ப் பிரிவு குடியிருப்புகளில் அடுக்குமாடி குடியிருப்பு எண்.1 இல் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் வீடு
தமிழ் இலக்கியப் பணிகளுக்காக 2012-ஆம் ஆண்டு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற முனைவர் இ. சுந்தரமூர்த்திக்கு சென்னை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தெற்காசியக் கூட்டமைப்பு விளையாட்டு கிராமக் கோட்டத்தில், கோயம்பேடு திட்டப்பகுதி 304 உயர் வருவாய்ப் பிரிவு அடுக்குமாடி குடியிருப்பு எண்.சி2/231இல் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எழுத்தாளர் பூமணி
2014-ஆம் ஆண்டு ஆண்டு "அஞ்ஞாடி" எனும் புதினத்திற்காக சாகத்திய அகாதமி விருது பெற்ற திரு. பூமணி என்கிற பூ.மாணிக்கவாசகத்துக்கு சென்னை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தெற்காசியக் கூட்டமைப்பு விளையாட்டு கிராமக் கோட்டத்தில், கோயம்பேடு திட்டப்பகுதி 304 உயர் வருவாய்ப் பிரிவு அடுக்குமாடி குடியிருப்பு எண்.பி1/3இல் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அண்ணாநகரில் வீடு
தமிழ் இலக்கியப் பணிகளுக்காக 2014-ஆம் ஆண்டு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற முனைவர் கு. மோகனராசுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், அண்ணாநகர் சாந்தி காலனி நடுவாங்கரை திட்டம், 16 உயர் வருவாய்ப் பிரிவு குடியிருப்புகளில் அடுக்குமாடி குடியிருப்பு எண்.474/1 இல் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எழுத்தாளர் இமயம்
2020-ஆம் ஆண்டு "செல்லாத பணம்" எனும் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற திரு. இமையம் என்கிற வெ. அண்ணாமலைக்கு சென்னை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தெற்காசியக் கூட்டமைப்பு விளையாட்டு கிராமக் கோட்டத்தில் 304 உயர் வருவாய்ப் பிரிவு அடுக்குமாடி குடியிருப்பு எண்.பி1/65இல் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications