“லவ் யூ தாத்தா”.. என் ஆசையை நிறைவேத்திட்டீங்க! முதல்வர் ஸ்டாலினுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்த சிறுவன்!
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றுவதை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய நிலையில், அந்த மாணவன் சிறப்பு விருந்தினராக இன்று நேரில் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
நாடு முழுவதும் இன்று 77-வது சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கோட்டையில் காலை 9 மணி அளவில் முதல்வர் மு.க மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மக்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்.

முன்னதாக காலை 8.45 மணிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். அதன்பிறகு முப்படையினர் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டர். தொடர்ந்து கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடி ஏற்றும் இடத்துக்கு வந்த முதல்வர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். அதன்பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
சுதந்திர தினத்தன்று கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுவதை நேரில் காண ஆசையாக இருப்பதாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர் லிதர்சன், முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, மாணவன் லிதர்சனை இன்று தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மாணவன் லிதர்சன் தனது தாயுடன், சுதந்திர தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து, முதலமைச்சர் ஸ்டாலின் கொடி ஏற்றி சல்யூட் அடித்தை உற்சாகமாக கண்டு ரசித்தார். முதலமைச்சர் அழைப்பின் பேரில் நேரில் கலந்து கொண்டு, தேசியக் கொடி ஏற்றியதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறுவன் லிதர்சன்.
மேலும், "என் ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர் ஐயாவுக்கு நன்றி.. லவ் யூ தாத்தா" எனத் தெரிவித்து முதலமைச்சருக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்துள்ளார் மாணவன் லிதர்சன். இந்தக் காணொளி முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பாப்பனம் ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படிக்கும் விதர்சன் என்ற மாணவன், முதலமைச்சர் சுதந்திர தின விழாவில் கொடி ஏற்றுவதை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என கடிதம் எழுதி இருந்தான். அந்தச் சிறுவனின் ஆசையை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நிறைவேற்றி… pic.twitter.com/NYap9NO4wd
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 15, 2023
இதுகுறித்து முதலமைச்சரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பாப்பனம் ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படிக்கும் விதர்சன் என்ற மாணவன், முதலமைச்சர் சுதந்திர தின விழாவில் கொடி ஏற்றுவதை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என கடிதம் எழுதி இருந்தான். அந்தச் சிறுவனின் ஆசையை முதலமைச்சர் நிறைவேற்றி வைத்தார்." என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து லிதர்சனின் தாயார் அமுதவல்லி, "எனது மகனின் ஆசையின்படி எங்களை சென்னை அழைத்து தங்க வைத்து கொடியேற்றும் நிகழ்வை நேரில் காணச் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி " எனத் தெரிவித்தார். மாணவன் லிதர்சனின் ஆசிரியர் சண்முகம், "எங்கோ கடைக்கோடில் இருக்கும் எங்கள் மாணவனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக முதல்வர் சிரத்தையெடுத்து அழைத்து கௌரவப்படுத்தி மாணவனின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications