"நீதி கிடைத்தது, மு.க.ஸ்டாலின் தெய்வமாக தெரிகிறார்" - நடிகை வாணிஸ்ரீ நெகிழ்ச்சி
சென்னை: சொந்த நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கும் கொடுமையை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? 'அதைவிட நரக வேதனை வேறு எதுவும் இல்லை' என்கிறார் பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ.
சென்னையின் பிரதான இடத்தில் அமைந்திருந்த வாணிஸ்ரீயின் பல கோடி மதிப்பிலான நிலத்தை, சில நபர்கள் மோசடிப் பதிவு மூலம் அபகரித்து வைத்திருந்தனர். தமிழ்நாடு அரசின் புதிய சட்டம் மூலம் வாணஸ்ரீயின் கைகளுக்கு அவரது சொத்து வந்து சேர்ந்துள்ளது.

என்ன சொல்கிறது புதிய சட்டம் ?
தமிழ்நாட்டில் போலி பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் வகையில் புதிய சட்டத் திருத்தம் ஒன்றை அரசு அமல்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய பதிவுச் சட்டத்தில் தமிழ்நாடு அளவில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதன்மூலம், மோசடியான பத்திரப் பதிவுகளை ஆய்வு செய்து பதிவாளரே ரத்து செய்ய முடியும். இந்தச் சட்டத் திருத்தத்துக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார். அதேநேரம், மத்திய சட்டத்தில் திருத்தம் என்பதால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதுதொடர்பான ஆய்வுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ ஒப்புதல் கொடுத்தார். இதனையடுத்து, புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி, 'பதிவுச் சட்டத்தின் விதிகளுக்கு (22 ஏ, பி) மாறாக பத்திரப் பதிவு நடந்திருந்தால், அதனை பதிவாளரே தானாக முன்வந்தோ அல்லது புகார்களின் மீதோ ரத்து செய்யலாம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு பத்திரப்பதிவு ரத்து செய்யப்படும்போது 30 நாள்களுக்குள் பதிவுத் துறை தலைவரிடம் மேல்முறையீடு செய்யலாம். இச்சட்டம் அமலுக்குள் வந்த நாளில் இருந்து தற்போது வரையில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வரிசையில், நடிகை வாணிஸ்ரீயின் 11 ஆண்டுக்கால போராட்டத்தை மின்னல் வேகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார். தனது நிலத்தை மீட்பதற்காக அவர் இதுவரையில் 7 கோடி ரூபாயை செலவழித்திருக்கிறார். இதற்காக அவர் ஏறாத நீதிமன்றங்கள் இல்லை; அவர் முறையிடாத அதிகாரிகள் இல்லை.

இனி வாணிஸ்ரீ சொல்வதைக் கேளுங்கள்:
'உங்களுக்கு ஒன்று சொல்லட்டுமா? எனக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம். என்றைக்கு இருந்தாலும் இந்த நிலம் எனக்குக் கிடைக்கும் என நம்பினேன். நான் நேர்மையாகச் சம்பாதித்து வாங்கிய சொத்து இது.
ஆனால் என்னுடைய நிலத்தை ஒரு சில குண்டர்கள் போலி ஆவணங்களைத் தயாரித்து அபகரித்துவிட்டனர். நீதிமன்றத்துக்கும் வழக்கறிஞர்களுக்கும் சேர்த்து 7 கோடி ரூபாயைச் செலவழித்திருக்கிறேன். ஆனால் அங்கெல்லாம் கிடைக்காத நீதி, முதலமைச்சர் ஸ்டாலின் மூலம் கிடைத்திருக்கிறது. எவ்வளவோ முறையிட்டும் ஜெயலலிதாவே ஒன்றும் செய்ய முடியாமல் தவித்தார்.
ஸ்டாலின் முதலமைச்சராக வந்ததே எனக்காகத்தான். நான் அப்படித்தான் நம்புகிறேன். கடவுள் அவரை முதலமைச்சராக அனுப்பியதே என் சொத்தை மீட்டுக் கொடுக்கத்தான்" - வார்த்தைகளை நிறுத்தாமல் உற்சாக மிகுதியில் விவரித்தார், நடிகை வாணிஸ்ரீ.
இவரைப்போல, போலி நில ஆவண மோசடியில் சிக்கி தங்கள் சொத்துகளையும் வாழ்க்கையையும் இழந்தவர்கள் பலர். அந்த வரிசையில், நிலத்தை மீட்கும் முயற்சியில் தன் மகனையே நடிகை வாணிஸ்ரீ இழந்ததுதான் வேதனை.
"எனது சொத்தை அபகரித்தவர்கள் அதைத் திரும்ப ஒப்படைப்பதற்காக 10 கோடி ரூபாய் வரை பேரம் பேசினார்கள். எங்களின் சொத்து ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தன. அவர்களிடம் இருந்த ஆவணங்கள் முழுக்க போலியானது.

முதலமைச்சர் ஸ்டாலின்
ஆனாலும் நீதி கிடைக்காமல் தவித்தோம். என் மகன் மருத்துவம் படித்தவன். இந்தச் சொத்தை இழந்த சோகத்தில் குடித்துக் குடித்தே ஒருநாள் தற்கொலை செய்து கொண்டான். நான் அவனிடம் எவ்வளவோ நம்பிக்கை வார்த்தைகளைச் சொன்னேன். 'நம்மைத் தெய்வம் கைவிடாது நம்பு' எனக் கொஞ்சினேன்.
அவன். 'போம்மா, நீயும் உன் கடவுளும்' என்று சொல்லிவிட்டு விரக்தியில் உயிரை விட்டுவிட்டான். அந்த வலியை என்னால் வார்த்தைகளில் சொல்ல முடியாது. என்னுடைய சோகத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மருந்து போட்டுள்ளார். என்னுடைய சொத்து என் கைக்கு வந்துவிட்டது. ஆனால், என் மகன் என்னை விட்டுப் போய்விட்டான்" எனக்கூறி கண்ணீர் வடித்தார் வாணிஸ்ரீ.
வாணிஸ்ரீக்கு சொந்தமான நிலத்தின் ஆவணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்படைத்த அடுத்த நொடியே ஆக்ரமிப்பு கும்பல், தலைமறைவாகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இந்த சட்டத்திருத்தம் உள்ளது' என முதலமைச்சரும் ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். சட்டத் திருத்தத்துக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட வேகத்திலேயே அதனை அமல்படுத்தி, இழந்த சொத்துகளையும் மீட்டுக் கொடுப்பதன் மூலம் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்திருக்கிறது.
தலைமைச் செயலகத்தில் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி போலி பத்திரங்களால் பாதிப்புக்கு ஆளான ஐந்து பேருக்கு முறையான ஆவணங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அதில் நடிகை வாணிஸ்ரீயும் ஒருவர்.
தனது ஆவணங்களை முதலமைச்சர் கையால் பெற்றுவிட்டு வெளியே வந்த அவர், "தமிழ்நாட்டில் என்னைப்போல 8 ஆயிரம் பேர் உள்ளனர். 50 வருடங்களுக்கு முன்னால் நான் வாங்கிய நிலத்தை மீட்கவே இவ்வளவு போராட்டம். ஒரு நடிகைக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களின் நிலைமை என்னவாகும்?" என்ற கேள்வியை எழுப்பினார்.
அது உண்மைதான். வாணிஸ்ரீ தன் சொத்தை மீட்பதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்றார். அவர் தரப்பில் வாதிட்ட வழக்குரைஞர்கள் பலர் மிகப் பிரபலமானவர்கள். ஆனாலும், தனது நிலத்தை அவரால் மீட்க முடியவில்லை. நீதிமன்றத்தில் நீண்டு கொண்டே இருந்த இந்த வழக்கை, புதிய சட்டத்திருத்தம் மூலம் தமிழ்நாடு அரசு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

முதலமைச்சர் சொன்னது என்ன?
தொடர்ந்து பேசிய வாணிஸ்ரீ, "பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களுக்கு அலைந்து கொண்டிருந்தேன். என்னுடைய நிலம் அபகரிக்கப்பட்ட கதை அதிகாரிகளுக்கும் தெரியும். சட்டம் திருத்தப்பட்ட உடன், முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்துக்கு எனது பிரச்னையைக் கொண்டு சென்றுள்ளனர். அவர் உடனே களத்தில் இறங்கி நடவடிக்கை எடுத்தார்.
எனக்கு கலைஞர் கருணாநிதியை தெரியும். அவரது வசனத்தைப் பேசி நடித்திருக்கிறேன். ஆனால் ஒருமுறைகூட எந்த உதவிக்காகவும் நான் அவரை போய்ச் சந்தித்ததில்லை. அவரது மகன் இன்று என் வாழ்நாளில் மாபெரும் பரிசைக் கொடுத்திருக்கிறார்.
நான் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தபோது, ' புதிய சட்டத்திருத்தம் மூலம் முதன்முதலாக உங்களுக்கு இந்தப் பலன் வந்து சேர்ந்ததில் மகிழ்ச்சி' என்றார்.
அப்போது அவர் எனக்கு தெய்வமாகவே தெரிந்தார். இந்தச் சொத்தால் எவ்வளவோ இழப்புகள் ஏற்பட்டன. என் மகனையே இழந்துவிட்டேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்டாலின் முதலமைச்சராக இருந்திருந்தால் என் மகனை இழந்திருக்க மாட்டேன்" என்கிறார் வாணிஸ்ரீ.
'தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம் எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது' என்பதற்கு நடிகை வாணிஸ்ரீ நேரடி சாட்சி.
-
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது!












Click it and Unblock the Notifications