ஒரு நொடி ஸ்டன் ஆன உளவுத்துறை.. கண்கள் சிவந்த ஸ்டாலின்.. போனில் பறந்த டோஸ்.. என்ன நடந்தது?
சென்னை: நாகா இன மக்களை ஆர்.எஸ்.பாரதி கொச்சைப்படுத்திய விவகாரம் ஸ்டாலினை மிகவும் அப்-செட்டாக்கியிருக்கிறதாம். கடும் காய்ச்சலில் ஓய்வு எடுத்து வரும் சூழலிலும், பாரதியை தொடர்புகொண்டு மிக கோபமாக கண்டித்திருக்கிறார் ஸ்டாலின்.
திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி, கருணாநிதி நூற்றாண்டு விழா கூட்டம் ஒன்றில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்து பேசினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசை வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பதாகவும், தொல்லை கொடுப்பதற்கென்றே செயல்படுவதாகவும், தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

என்ன நடந்தது?: இதில் கவர்னர் ரவியை விமர்சிக்கும் நோக்கத்தில், நாகா இன மக்களை நாய் கறி உண்பவர்கள் என்று கொச்சைப்படுத்தினார். நாகாலாந்திலே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஏற்பட்ட நிலையில் என்ன தெரியுமா? ஊரை விட்டே விரட்டியடித்தனர். தப்பா நினைத்துக் கொள்ளக்கூடாது, ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன். நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பார்கள், அவர்களே அங்கு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை ஓட ஓட விரட்டிவிட்டாகள் என்றால் உப்பு போட்டு திண்ணும் தமிழர்களாகிய நாம் என்ன செய்வோம்?" என ஆவேசமாகப் பேசினார் ஆர்.எஸ்.பாரதி.
அந்த விழாவில், பேச்சாளர்களின் பேச்சுக்களை குறிப்பெடுத்துக் கொண்டிருந்த மாநில உளவுத்துறையினர், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சை அப்படியே முழுமையாக ஆடியோ, வீடியோவாக மாநில உளவுத்துறை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அந்த வீடியோ, ஆடியோ நோட்ஸ், உளவுத்துறை ஐ.ஜி.செந்தில் வேலனின் பார்வைக்கு போனது. அதனை கேட்டு ஆடிப்போய்விட்டார் அவர். ஏற்கனவே, பாரதியின் பேச்சால் பல சர்ச்சைகள் இருக்கிறது.
இதில் இது வேறயா? ஒரு இனத்தை கொச்சைப் படுத்தியிருக்கிறார். இதில் என்னென்ன சர்ச்சை உருவாக்குமோ என அதிர்ச்சியடைந்த உளவுத்துறை, "நாகா இனமக்களைப் பற்றி பேசியுள்ள விசயங்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு இன மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவது தேவையற்ற எதிர்வினைகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தும் " என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறது.
சர்ச்சை மேல் சர்ச்சை: உளவுத்துறை பயந்தது போலவே, ஆர்.எஸ்.பாரதியின் பேச்சைக் கண்டித்து எதிர்வினையாற்றியுள்ளார் கவர்னர் ஆர்.என்.ரவி. ஆர்.எஸ்.பாரதியின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ஆளுநரை கடுமையாக விமர்சித்துப் பேசி சர்ச்சைகளில் சிக்கியுள்ள ஆர்.எஸ்.பாரதி, இப்போது நாகாலாந்து மக்கள் பற்றிப் பேசியிருப்பது கண்டனங்களை எழுப்பி வருகிறது.
ஸ்டாலினுக்கு போன தகவல்; இதை அறிந்த உளவுத்துறை, கவர்னரின் 'எக்ஸ்' ஸ்டேட்மெண்ட்டையும் முதல்வரின் கவனத்துக்கு அனுப்பியதோடு, பாரதியின் பேச்சை அரசியலாக்க பாஜக திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்திருக்கிறதாம். இதற்கிடையே, உதயநிதியை தொடர்புகொண்டு பேசிய முதல்வர் அலுவலக அதிகாரிகள், " தேர்தல் நேரம் இது. திமுகவினர் வாய்க்கு பூட்டுப்போடுங்கள்.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களையும், மரியாதைக்குறைவாக பேசுவதையும் தடை போடுங்கள். இல்லைன்னா சர்ச்சைகளை சமாளிக்கவே நேரம் இருக்காது" என்று சொல்லியிருக்கிறார்கள். இதனை அப்பா முதல்வரிடம் தெரிவித்துள்ளார் உதயநிதி. இதனையடுத்துதான் ஆர்.எஸ்.பாரதியை தொடர்புகொண்டு கண்டித்துள்ளார் என்கிறார்கள் திமுக மேலிட தொடர்பாளர்கள்.
விளக்கம்: இது தொடர்பாக ஆர் எஸ் பாரதி தற்போது விளக்கமும் அளித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நாகாலாந்து மக்களை நான் இழிவுப்படுத்தியதாக ஆளுநர் ரவி கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி. நாகாலாந்து மக்கள் நாய்கறி உண்பது அவர்களின் கலாச்சாரம் என்பதனை Gauhati உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உறுதி செய்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications