‛சோகம் மறந்து சிரித்த ஸ்டாலின்’.. திமுக எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பதிலால் சபையில் ஒரே சிரிப்பலை
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலியான நிலையில் இன்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் சோகமாக இருந்தார். இந்த வேளையில் திமுக எம்எல்ஏ கேட்ட கேள்விக்கு சட்ட அமைச்சர் எஸ் ரகுபதி கூறிய பதிலால் கவலையை மறந்து முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைத்து உறுப்பினர்களும் சிரித்தனர்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இன்று 2வது நாளாக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. காலை 10 மணிக்கு சபை தொடங்கியதும் அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

கேள்வி நேரம் முடிவடைந்த பிறகு அனுமதிக்கப்படுவதாக கூறியும் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் பாமக எம்எல்ஏக்கள் தாமாகவே வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் தான் இன்று சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது கும்பகோணம் திமுக எம்எல்ஏ அன்பழகன் எழுந்து, ‛‛நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவே தமிழகத்தை உற்று பார்க்கிற அளவுக்கு 40க்கு 40 வென்றெடுத்த முதலமைச்சர் மற்றும் தோழமைக்கு பாராட்டுகள். கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் சட்ட அமைச்சர் தஞ்சை மாவட்டத்துக்கு சட்ட கல்லூரி தருவதாக கூறினார்.
திருச்சியில் ஒரு சட்டக்கல்லூரி உள்ளது. தஞ்சாவூரில் தனியார் சட்டக்கல்லூரி உள்ளது. கும்பகோணத்தை மாவட்ட தலைநகரமாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் கும்பகோணத்துக்கு அரசு சட்டக்கல்லூரி அமைத்து தருமா? என்பதை கேட்டு கொள்கிறேன்'' என்றார்.

இதையடுத்து அமைச்சர் எஸ் ரகுபதி சிரித்தபடி எழுந்து பதிலளித்தார். அப்போது அவர், ‛‛தஞ்சை மாவட்டத்தில் சட்டக்கல்லூரி அமைத்து தருவதாக நாங்கள் எந்த மாதிரியான வாக்குறுதியும் தரவில்லை'' என சிரித்தபடி கூறினார். இந்த வேளையில் முதல்வர் ஸ்டாலின் உள்பட சபையில் இருந்த அனைவரும் சிரித்தனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணம் தொடர்பான தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் உள்பட எம்எல்ஏக்கள் சோகமாக அமர்ந்திருந்தனர். இந்த வேளையில் அமைச்சர் எஸ் ரகுபதியின் இந்த பதில் சட்டசபையில் சிரிப்பலையை உருவாக்கியது.
மேலும் அமைச்சர் எஸ் ரகுபதி பேசும்போது, ‛‛ஒரு சட்டக்கல்லூரி உருவாக்க வேண்டும் என்றால் ரூ.100 கோடிக்கு மேல் அரசுக்கு செலவாகிறது. ஆனால் ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு சட்டக்கல்லூரி உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சருக்கு இருந்தாலும் கூட நிதி அமைச்சரிடம் அதற்கான தொகை இல்லாத காரணத்தால் தான் தாமதப்பட்டு வருகிறது. இதனால் நிதித்துறை எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருகிறதோ, அந்த அளவுக்கு சட்டக்கல்லூரிகள் உருவாக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications