ரூ. 6000 நிவாரணம்.. டோக்கன் விநியோகத்தில் என்ன நடக்குது? ஸ்டாலின் கேட்ட கேள்வி.. ரேஷனில் பரபரப்பு
சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழங்கப்பட்டு வரும் வெள்ள நிவாரணம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறாராம்.
தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கிட ரூ.1487 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு உத்தரவு: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (17.12.2023) சென்னை, வேளச்சேரி, சக்தி விஜயலட்சுமி நகர், நியாய விலைக் கடை அருகில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணியினை பயனாளிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரும் மழைப்பொழிவின் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
மிக்ஜாம் புயல் வெள்ளம்: “மிக்ஜாம்” புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 9.12.2023 அன்று அறிவிப்பினை வெளியிட்டார்.
நிவாரணம் வழங்கப்படும்: இந்த நிவாரணத் தொகை, சென்னை மாவட்டத்தின் அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும் மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்கள், ஆகிய பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக ரூ.6000/- நிவாரணத் தொகை இன்று முதல் ரொக்கமாக வழங்கப்படுகிறது.
சென்னை மாவட்டத்தில் 13 இலட்சத்து 72 ஆயிரத்து 509 குடும்ப அட்டைதாரர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 6 இலட்சத்து 8 ஆயிரத்து 726 குடும்ப அட்டைதாரர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 இலட்சத்து 12 ஆயிரத்து 952 குடும்ப அட்டைதாரர்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 இலட்சத்து 31 ஆயிரத்து 149 குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறுவர். இதற்கென தமிழ்நாடு அரசால் 1486 கோடியே 93 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஆலோசனை: இந்த நிலையில் டெல்லியில் இருந்து திரும்பி வந்த முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் அது தொடர்பாக ஆலோசனை செய்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதை தொடர்ந்து அதிகாரிகளிடம் ஸ்டாலின் நிவாரண தொகை குறித்து பேசினார். டோக்கன் சரியாக வழங்கப்படுகிறதா? ரேஷன் கடைகளில் அதிக கூட்டம் வரிசை இருக்கிறதா? என்று ஆலோசனை செய்தார். முக்கியமாக சில இடங்களில் டோக்கன் பிளாக்கில் கொடுக்கப்படுவதாக புகார்கள் முதல்வர் காதுக்கு சென்றுள்ளது.
அதாவது சில இடங்களில் ரேஷன் ஊழியர்கள், கவுன்சிலர்கள் வழியாக டோக்கன்கள் கொடுக்கப்படுவதாக புகார்கள் முதல்வர் காதுக்கு சென்றுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளார். இதுவரை பட்டுவாடா செய்யப்பட்ட பணம்.. பயன்பெற்ற நபர்களின் எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications