"வாக்கு அரசியலுக்காக எதையும் செய்யல.. அரசியலில் சொகுசுக்கு இடம் இல்லை”.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
சென்னை: "பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு அரசியலுக்காக முன்னெடுத்த திட்டம் அல்ல. அரசியல் என்பது மக்கள் பணி, எங்களைப் பொறுத்தவரை சொகுசுக்கு இடம் இல்லை. எதையும் நாங்கள் வாக்கு அரசியலுக்காக செய்யவில்லை" என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு அரசின் "தாயுமானவர்" திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் "அன்புக்கரங்கள்" திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அன்புக் கரங்கள் திட்டம், பெற்றோர்களை (இருவரையும் அல்லது ஒருவரை) இழந்து, பராமரிக்க இயலாத நிலையிலுள்ள குழந்தைகளுக்கு 18 வயது வரை பள்ளிக் கல்வியைத் தொடர உதவும் வகையில், மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்குகிறது. இது தமிழ்நாடு அரசின் "தாயுமானவர்" திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, இந்தக் குழந்தைகளுக்கு உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். இத்திட்டம், வறுமையில் வாழும் குடும்பங்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து 12ஆம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
பின்னர் இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "இன்று தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணாவின் பிறந்தநாள். குழந்தைகளின் சிரிப்பு தான் அண்ணாவுக்கு நாங்கள் செய்யும் மரியாதை, மக்களின் குரலாக திமுக எதிரொலித்து வருகிறது. கடைக்கோடி மக்களின் தேவையையும் பூர்த்தி செய்கிறோம். பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு அரசியலுக்காக முன்னெடுத்த திட்டம் அல்ல.
அரசியல் என்பது மக்கள் பணி, எங்களைப் பொறுத்தவரை சொகுசுக்கு இடம் இல்லை. நான் காலையில் ஒரு இடத்தில மக்களுடன் பேசிக்கொண்டு இருப்பேன். மாலை பல நூறு கி.மீ கடந்து இன்னொரு பகுதியில் மக்களுடன் இருப்பேன். பெரியார், அண்ணா, கலைஞர் எங்களுக்கு உழைப்பைத்தான் கற்று தந்தனர். எங்களின் அடிப்படை பதவி அல்ல, பொறுப்புதான். அரசியல் என்றால், பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருக்கலாம் என சிலர் நினைக்கிறார்கள், எங்களுக்கு எப்போதும் பொறுப்பு தான் முக்கியம்.
அதிகாரம் என்பது சாமானிய மக்களுக்காகப் போராடுவது. வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம். அந்த நம்பிக்கையை பெறும் கொள்கையும், செயல் திட்டமும், உழைப்பும் எங்களிடம் இருக்கிறது. அந்த நம்பிக்கையினால் பெறப்பட்டிருக்கும் இந்தப் பொறுப்பு, சமூகத்தின் கடைக்கோடி மனிதரையும் கைக்கொடுத்து மேலே தூக்கி விடுவற்காக கிடைத்த வாய்ப்பு.
அந்தக் கையாகத்தான் என் கை இருக்கும். அப்படித்தான் இருந்துகொண்டு இருக்கிறது. அன்புக் கரங்கள் திட்டம் மூலம் 6,082 குழந்தைகளுக்கு மாதம் தோறும் ரூ.2,000 வழங்கப்படும், நீங்கள் படித்து முடித்து சமுதாயத்திற்கு பணியாற்ற வேண்டும். இதென்ன வாக்கு அரசியல் செய்வதா? காலையில் பசியோடு வரும் குழந்தைகளைப் பார்த்து காலை உணவுத் திட்டத்தை உருவாக்கினேன். 21 லட்சம் குழந்தைகளுக்கு இப்போது காலை உணவு வழங்கப்படுகிறது. இது வாக்கு அரசியல்லு செய்வதா?" எனப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications