செம மாஸ்! முதல்முறையாக மைக்ரோசாப்ட் உடன் ஒப்பந்தம்! அசத்திய அன்பில் மகேஷ்.. முதல்வர் பெருமிதம்!
சென்னை: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, கிராமப்புறங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உலகத்தர தொழில்நுட்பக் கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இச்செய்தியைக் குறிப்பிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பாராட்டியுள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மைக்ரோசாஃப்ட் உடன் ஒப்பந்தம்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கல்வித்துறை மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "TEALS (Tecnical Education And Learning Support) எனும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாட்டின் கிராம பகுதிகளைச் சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கு அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த புரிதலும் சென்றடைய TEALS திட்டம் செயல்படுத்தப்படும்.

முதலமைச்சர் ஸ்டாலின் வானவில் மன்றம் திட்டத்தின் வாயிலாக STEM முயற்சியை தொடங்கி வைத்தார்கள். மாணவர்களின் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிக்கும் விதமாக 710 கருத்தாளர்களின் உதவியோடு மாணவர்களின் அறிவியல் திறன்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. இதன் அடுத்த கட்டமாக Robotics, Artificial Intelligence, Machine learning போன்ற தொழில்நுட்பங்கள் நமது கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் நோக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பலத்த போட்டிக்கு மத்தியில்: TEALS எனும் திட்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து தங்கள் மாநிலங்களில் செயல்படுத்த வேண்டுமென இந்தியாவில் உள்ள பல மாநிலங்களும் போட்டியிட்டன. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தந்த ஆக்கத்தினாலும், ஊக்கத்தினாலும் தமிழ்நாடு மாநிலம் முதன்முறையாக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
நவீன தமிழ்நாட்டின் தந்தை கருணாநிதி நூற்றாண்டு விழாவில் இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தமிழர்களாகிய நமக்கு கிடைத்த பெருமையாகும். முதல்கட்டமாக 13 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 3800 மாணவர்கள் பயன்பெறும் வகையில் TEALS திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
மிக விரைவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மைக்ரோசாப்ட் இயக்குனர்கள் பங்குபெறும் TEALS திட்டத் தொடக்க விழா தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இத்திட்டம் அனைவராலும் பாராட்டப்படும் என மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இதற்கு உறுதுணையாக விளங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சிசில் சுந்தர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்." எனத் தெரிவித்தார்.
தம்பி மாண்புமிகு @Anbil_Mahesh அவர்கள் அமெரிக்கப் பயணத்தின்போது, ஊரகப் பகுதி மாணவர்களுக்கு உலகத்தரத்திலான தொழில்நுட்பக் கல்வி அறிமுகத்தை வழங்க @Microsoft-உடன் இணைந்து @tnschoolsedu மேற்கொள்ளும் முன்முயற்சிகளைப் பற்றி என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
— M.K.Stalin (@mkstalin) July 7, 2023
தமிழர்களின் இதயத்துடிப்பான… https://t.co/VWyh3kJQt4
முதல்வர் ஸ்டாலின் பாராட்டு: மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழக கல்வித்துறை மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அமெரிக்கா சென்றுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தன்னிடம் இதுகுறித்து போனில் தெரிவித்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமெரிக்கப் பயணத்தின்போது, ஊரகப் பகுதி மாணவர்களுக்கு உலகத்தரத்திலான தொழில்நுட்பக் கல்வி அறிமுகத்தை வழங்க மைக்ரோசாப்ட் உடன் இணைந்து தமிழ்நாடு கல்வித்துறை மேம்பாட்டிற்காக மேற்கொள்ளும் முன்முயற்சிகளைப் பற்றி என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
தமிழர்களின் இதயத்துடிப்பான கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்துவதே நமது திராவிட மாடல் அரசின் இலக்கு. அதற்கான பணிகளில் ஈடுபடும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுகள்! கல்வியிற் சிறந்த தமிழரெனப் பார் போற்ற பாடுபடுவோம்!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications