3 வருட ஆட்சியில் “நாலுகால் பாய்ச்சல்” வளர்ச்சியில் கல்வித்துறை.. பெருமைப்பட்ட முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலு கால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், "அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலு கால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி!

20,332 அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி,
519.73 கோடி ரூபாயில் உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள்,
22,931 'Smart' வகுப்பறைகள்,
புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களினால் உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு.
நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம்தான் இது! பயணத்தைத் தொடர்வோம்! தமிழ்நாட்டை உயர்த்துவோம்!" என்று குறிப்பிட்டுள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரையும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது குறித்து வெளியாகியுள்ள செய்தியையும், தமிழக அரசின் கல்வி திட்டங்களால் உயர் கல்வியில் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பது பற்றிய செய்தியையும் பகிர்ந்து இதனைத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து இணையதள வசதியினை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள 6,223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இதுவரை 5,913 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 6,992 நடுநிலைப்பள்ளிகளில் 3,799 பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மொத்தமுள்ள 24,338 தொடக்கப் பள்ளிகளில் 10,620 பள்ளிகளில் அதிவேகம் கொண்ட இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இணைய வசதி வழங்கும் பணியானது முழுமையாக முடிக்கப்பட்டு, மீதமுள்ள 17,221 அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் மாத இரண்டாம் வார இறுதிக்குள் நிறைவடையும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கற்றல் செயல்பாட்டில் புதுமையான அனுபவங்களோடு உத்வேகமான மன நிலையோடு கல்வி கற்பதற்காக, தமிழக அரசு விரைவாக இணைய சேவை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தான், உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் பற்றி பெருமிதம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications